திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (13:05 IST)

வன்னியர்களின் இந்த நிலைக்கு அதிமுகவின் அவசரகதியே காரணம்: துரைமுருகன்!

அதிமுக ஆட்சியின் அவசரகதியே வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு சட்டம் ரத்திற்கு காரணம் என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 
கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் பிரிவினருக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் உள்ஒதுக்கீடை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
அதை தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை தற்போது விசாரித்த உச்சநீதிமன்றம், இடஒதுக்கீட்டிற்கு சரியான காரணங்கள் இல்லை என கூறி உள்ஒதுக்கீடு ரத்து செல்லும் என உத்தரவிட்டுள்ளது.
 
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளதாவது, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டு வந்த அருந்ததியினர் மற்றும் இஸ்லாமியருக்கான உள்ஒதுக்கீட்டு முறைகள் அனைத்திற்கும் சரியான ஆதாரங்களின் அடிப்படையில் சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டதால், அனைத்து நீதிமன்றங்களாலும் அவை   ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ்நாட்டில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.  
 
ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில், தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவசர கோலத்தில் அள்ளித்தெளித்தது போல சரியான அடிப்படைத் தரவுகள் இன்றி இந்த சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதால்தான் உச்சநீதிமன்றத்தால் இச்சட்டம் இரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.   
 
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியபடி, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, இந்த வழக்கு தொடர்பாக அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு முழுமூச்சுடன் மேற்கொண்டும், இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.