நெல்லை கல்குவாரி விபத்து: 55 குவாரிகளை ஆய்வு செய்ய சிறப்பு குழு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்ய வெளி மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 18 சுரங்க துறை நிபுணர்களும் பங்கேற்பார்கள். ஆய்வறிக்கையின் அடிப்படையில் குவாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்என நெல்லை அடைமிதிப்பான் குளம் குவாரியில் மீட்பு பணிகள் முடிவடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் பகுதியில் உள்ள தனியார் குவாரியில் கடந்த 14ம் தேதி பாறைகள் சரிவு ஏற்பட்டு குவாரிக்குள் விழுந்தது. இதில் 6 பேர் சிக்கி கொண்டனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்க 8 நாட்கள் மீட்பு பணிகள் நடந்தன.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இருவர் உயிருடன் மீட்டப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு ஆறாவது நபரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் குவாரி மீட்பு பணிகள் முடிவுக்கு வந்தன. நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, குவாரியை இன்று மீண்டும் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்ய 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு குழுவில் பிறமாவட்ட அதிகாரிகளும் இடம் பெறுவார்கள்.
இந்த குழுவின்தலைவராக மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் இடம் பெறுவார். துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் வருவாய் துறை, கனிம வளத்துறை, காவல்துறையினரும் இந்த குழுவில் இடம்பெறுவார்கள். இந்த குழுக்களின் ஆய்வு அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குவாரிகளின் மீது எடுக்கப்படும். போர்க்கால அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.