வனவிலங்குகளை கொரோனாவிலிருந்து காக்க சிறப்பு குழு – தமிழக அரசு அறிவிப்பு
வண்டலூர் பூங்காவில் கொரோனா பாதித்து சிங்கங்கள் உயிரிழந்த நிலையில் வனவிலங்குகளை காக்க சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 10 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் இரண்டு சிங்கங்கள் தொற்று பாதிப்பால் உயிரிழந்தன.
இந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பூங்காவில் உள்ள மற்ற சிறுத்தை, புலி போன்ற விலங்குகளுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வனவிலங்கு பூங்காக்கள், மிருகக்காட்சி சாலைகள் மற்றும் சரணாலயங்களில் உள்ள வன விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், உரிய மருந்துகள் வழங்கவும், பரவல் அதிகரிக்காமல் தடுக்கவும் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.