1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. premalatha vijayakanth talk about car issue

கேப்டன் குடும்பத்திற்கு ஒரு கார் வாங்கக் கூட தகுதியில்லையா? கார் விவகாரத்தில் எழுந்த அவதூறுக்கு பிரேமலதா கேள்வி!

கேப்டன்
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கணக்குகள் மற்றும் அரசியல் நகர்வுகள் நாள்தோறும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில், தேமுதிக ஆளும் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கிடையே, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அங்குப் பயணித்த சொகுசு கார் தற்போது அரசியல் அரங்கிலும், சமூக வலைதளங்களிலும் புதிய சர்ச்சையைத் தூண்டியுள்ளது.
 
 
திருப்பதி பயணத்தின் போது பிரேமலதா மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 'லேண்ட் ரோவர் டிஃபெண்டர்' (Land Rover Defender) சொகுசு காரில் சென்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதைத் தொடர்ந்து, திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்த பிறகுதான், அந்தப் பணத்தில் இந்த 3 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய சொகுசு காரை அவர்கள் வாங்கியுள்ளார்கள் என்று சில அரசியல் எதிர்ப்பாளர்களும், நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது தேமுதிக தொண்டர்களை கொதிப்படைய ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில், தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் வைக்கப்படும் இந்த அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்குத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தற்போது மிகக் காட்டமாகப் பதிலளித்துள்ளார். இந்த கார் விவகாரம் குறித்துப் பேசிய அவர், "நாங்கள் திருப்பதிக்குச் சென்று வந்த அந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் இப்போது வாங்கியது கிடையாது. ஒன்றரை வருடத்திற்கு முன்பே அந்த காரை நாங்கள் வாங்கிவிட்டோம். உண்மையை முழுமையாக மறைத்துவிட்டு, திமுகவுடன் கூட்டணி வைத்த பிறகுதான் நாங்கள் கார் வாங்கியதாகத் தவறான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்புகிறார்கள்," என்று விளக்கமளித்துள்ளார்.
 
 
மேலும் தமிழ்நாட்டு மக்களுக்காகவும், சினிமாவுக்காகவும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் குடும்பத்திற்கு, சொந்தமாக ஒரு கார் வாங்குவதற்குத் தகுதி கூட இல்லையா? கேப்டன் தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் நாங்கள் ஒரு கார் வாங்கக் கூடாதா?" என்று மிகவும்  கேள்வி எழுப்பியுள்ளார். 
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
போர் வந்தால் தங்கம் உயரும் தானே? பின்னர் ஏன் பயங்கரமாக குறைகிறது? இதுதான் காரணம்..!