வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (16:03 IST)

காவிரி வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு : ஆடு புலி ஆட்டம் ஆடும் அரசுகள்

காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 
125 ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் இன்று இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அமைத்த காவிரி நடுவர் மன்றம் 1991ம் ஆண்டு இடைக்கால தீர்ப்பு அளித்திருந்தது. பின்னர் 2007ம் ஆண்டு பிப்.5ம் தேதி காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பில், 10 மாத இடைவெளியில் 192 டி.எம்.சி நீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. 
 
ஆனால், 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 72 டி.எம்.சி அதாவது 264 டி.எம்.சி. நீர் கேட்டு தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதே சமயம்.  132 டி.எம்.சி மட்டுமே தர  முடியும் என கர்நாடகா மேல்முறையீடு செய்தது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு எதிராக தமிழகம், கர்நாடகாவைப் போல் கேரள, புதுச்சேரி அரசுகளும் வழக்கு தொடர்ந்தது. 2017 செப் 20ம் தேதி அனைத்து வாதங்களும் முடிந்த பின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
 
இந்நிலையில், இறுதி தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில் காவிரி நடுவர் நீதிமன்றம் வழங்கிய அதே 192 டி.எம்.சி நீரை கருத்தில் கொண்ட நீதிமன்றம், அதிலிருந்து 177.25 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 டி.எம்.சி இருப்பாதால், மீதமுள்ள 14.75 நீரையும் கர்நாடகத்திற்கே வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

 
கேட்டது கிடைக்காமல் போனதோடு, தமிழகத்திற்கு வர வேண்டிய நிரீல் 14.75 டி.எம்.சி நீர் கர்நாடகத்திற்கு சென்றுவிட்டது. இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக அரசியல் மாபெரும் தோல்வி என அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு பின்னால் அரசியல் இருப்பதாக வைகோ உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இது தமிழக அரசியல் கையாலாகாத்தனம் என திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
 
கருணாநிதி வாங்கிக் கொடுத்த 192 டி.எம்.சி நீரை கூட தமிழக அரசிற்கு தக்க வைத்துக்கொள்ள தெரியவில்லை. திறமையான, பிரச்சனைகளை சரியாக புரிந்த வழக்கறிஞர்களை வைத்து இந்த வழக்கை நடத்தவில்லை என்பது திமுகவின் வாதமாக இருக்கிறது.
 
நீதிமன்ற தீர்ப்பை யாரும் விமர்சிக்க முடியாது. ஆனால், கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, அங்கு வெற்றி பெற பாஜக எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். 

 
ஒருவேளை திறமையான வழக்கறிஞர்களை கொண்டு வழக்கு நடத்தியிருந்தால், தமிழகத்திற்கு சாதகாமாக தீர்ப்பு வர வாய்ப்பிருந்திருக்கலாம். ஆனால், அப்படி நடக்காமல் யார் தடுத்தார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அதுவும், அனைத்து விவகாரங்களிலும் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டுவரும் தமிழக அரசு, இந்த விவகாரத்தில் மட்டும் எப்படி அவர்களுக்கு எதிராக செயல்படுவார்கள் என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
தமிழகத்தின் 125 வருட சட்டப் போராட்டத்திற்கு இறுதியாக தோல்வியே கிடைத்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு முன்பும் கூறியிருக்கிறது. ஆனால், அதை மத்திய அரசு மதித்தது கிடையாது. எனவே, இந்தமுறையும், நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்கள் அலட்சியமே செய்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், கர்நாடகாவில் பாஜகவை கால் பதிக்க வைக்கும் அரசியல் கணக்கு அதில் இருக்கிறது. 
 
நாம் குரங்குகளாக இருந்த போதிலிருந்தே காவிரி ஓடிக்கொண்டிருக்கிறது. வாக்கு அரசியலுக்காக அரசியல்வாதிகள் தேசியத்தை மறந்து பேசுகின்றனர். வீடு பற்றி எரியும் போது பீடி பற்றவைக்கும் வாக்கு அரசியலால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என கமல்ஹாசன் கூறியிருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
 
பதில் கூற வேண்டிய இடத்தில் மாநில, மத்திய அரசுகள் இருக்கின்றன. ஆனால், அரசியலை தாண்டி அவர்கள் பதில் கூறுவார்களா என்பதுதான் விடை தெரியாத கேள்வி.