1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 5 பிப்ரவரி 2022 (09:07 IST)

வேட்பாளர் யாருக்கு சொந்தம்! ஒற்றை வேட்பாளரால் பாஜக – திமுக குழப்பம்!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக, திமுக கட்சி சார்பில் ஒரு பகுதியில் ஒரே வேட்பாளரின் பெயர் வெளியாகியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல் வெளியீடு என சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.

இந்நிலையில் ஆறுமுகநேரி பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டிருந்தது. அதில் 4வது வார்டு வேட்பாளராக ரேணுகாதேவி என்பவர் பெயர் இடம் பெற்றிருந்தது. அதேசமயம் பாஜக சார்பில் ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அதே 4வது வார்டில் அதே ரேணுகா தேவியின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஒரே வேட்பாளரை இரு கட்சிகள் அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திமுக, பாஜக தரப்பினர் அளித்த விளக்கத்தில் ரேணுகாதேவி முன்னதாக பாஜகவில் இருந்தவர் என்பதும் சமீபத்தில்தான் திமுகவில் இணைந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் பாஜகவுக்கு வேறு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.