தோல்வி அடைந்தாலும் தொகுதிக்கு சேவை செய்யும் தவெக வழக்கறிஞர்.. இதுதான் உண்மையான மக்கள் சேவை..!
திருத்தணி தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் வழக்கறிஞர் சத்யகுமார், அந்த தொகுதியின் வளர்ச்சிக்காக தன்னால் முடிந்த சேவைகளை செய்து வருகிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் தொலைநோக்கு பார்வையிலும், அமைச்சரும் பொதுச்செயலாளருமான ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலிலும், திருத்தணி தொகுதிக்கென பிரத்யேக தொகுதி மேம்பாட்டு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இது வெறும் அலுவலகமாக மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் ஒரு மையப்புள்ளியாக செயல்படும். நிலையான வளர்ச்சி இலக்குகளை மையமாகக் கொண்டு, 360 டிகிரி கோணத்தில் தொகுதியின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதே இதன் முதன்மை நோக்கம்.
கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு என ஒவ்வொரு துறையிலும் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்ய இந்த அலுவலகம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல் போன்றவற்றில் இந்த அலுவலகம் தீவிர கவனம் செலுத்தும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி, வெளிப்படையான மற்றும் வேகமான நிர்வாகத்தை இங்கிருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
திருத்தணி தொகுதியின் ஒவ்வொரு குடிமகனின் குரலும் கேட்கப்படும் இடமாக இந்த அலுவலகம் அமையும். அரசின் திட்டங்கள் கடைக்கோடி மனிதனுக்கும் சென்று சேருவதை உறுதி செய்வதே இந்த முன்னெடுப்பின் வெற்றி.
முதலமைச்சரின் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை, அமைச்சரின் நேரடி மேற்பார்வையில் தொகுதியின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க இந்த அலுவலகம் துரிதமாகச் செயல்படும். இது திருத்தணி தொகுதியின் புதிய விடியலுக்கான அடித்தளமாகும்.
Edited by Siva
