வங்கக்கடலில் முரசு புயல்: சென்னைக்கு எவ்வளவு அருகில் வரும்? எங்கெல்லாம் மழை பெய்யும்? முழு விவரம்!
வங்கக் கடலில் 'முரசு' புயல் இன்று உருவாக வாய்ப்புள்ள நிலையில், அதன் நகர்வு மற்றும் மழை பொழிவு குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
புயல் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், அதன் வெளிப்புற மழை மேகக்கூட்டங்கள் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வட தமிழக பகுதிகளை நோக்கி வரக்கூடும். குறிப்பாக, நாளை அதிகாலை முதல் சென்னையில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இருப்பினும், புயலின் மிக தீவிரமான மழை பொழிவுப் பகுதிகள் ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்வதால், தெற்கு மத்திய ஆந்திர பகுதிகளிலேயே கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் மிதமான மழைப்பொழிவு இருக்கும். சென்னையில் 40 முதல் 70 மி.மீ வரை மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்டம் இருந்தால் வட சென்னையின் கடலோர பகுதிகள் மற்றும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு போன்ற வட தமிழக எல்லை பகுதிகளில் நல்ல கனமழை பெய்யக்கூடும். புயல் காரணமாக சென்னை நகரில் நிலவி வந்த வெப்பமான சூழல் மாறி இதமான வானிலை நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

