1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 22 மார்ச் 2021 (12:32 IST)

என் மீது எந்த சாயமும் பூச முயற்சிக்காதீர்கள் - எச்சரித்த கமலஹாசன்

கோவை பீளமேடு பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட கமலஹாசன் சிறப்புரையாற்றினார். 

 
அப்போது பேசிய அவர், விவசாயத்தை விஞ்ஞானிகளின் கையில் கொடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகளின் கையில் கொடுத்து விடக்கூடாது என்றும் தெரிவித்தார். எங்கள் கட்சியை பொறுத்தவரை திருடாமல் வாழத் தெரிந்தவர்கள் தான் உள்ளனர் என்றும் என் கட்சியில் உள்ளவர்கள் இன்னும் நேர்மையாக வாழவேண்டும் என்பதை என்னால் நிர்பந்திக்க முடியும் என்றும் தெரிவித்தார். 
 
என் கட்சியில் உள்ளவர்களுக்கு நான் ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கின்றேன் என்று தெரிவித்தார் அவர் நான் படித்த நேர்மையை மற்றவர்களுக்கும் கற்றுத் தருகிறேன் என்று தெரிவித்தார். நான் குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் ஊழல் நிறுவனத்தின் தலைவர்களாக இருக்கின்றனர் அவர்களைப் பற்றி என்னால் பேசாமல் இருக்கமுடியாது என்றும் தெரிவித்தார். நல்லதை யார் கற்றுக் கொடுத்தாலும் நான் கற்றுக் கொள்வேன். எனவே நீங்களும் எனக்கு கற்றுக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். 
 
அரசின் சொத்துக்களை சேதப்படுத்த  சொல்பவர்கள் தலைவர்கள் கிடையாது என்றும் அப்படிப்பட்ட தலைவன் நான் இல்லை என்றும் தெரிவித்தார். பஞ்சாயத்து தலைவருக்கே உச்சநீதிமன்றத்தில் பதில் சொல்ல வைக்கும் அதிகாரம் உள்ளது என்றும் கூறினார்.  நலத்திட்டங்கள் இருப்பில் இலவசங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார். சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று எங்களது வேட்பாளர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
அங்கு நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பினால் இப்படிப்பட்ட கோமாளிகளிடமா நாம் மாட்டிக் கொண்டோம் என்று மக்கள் உங்களுக்குப் புரிந்துவிடும் என்பதனால் தான் அவற்றை நேரடியாக ஒளிபரப்பாமல் பதுக்கி வைத்து உள்ளார்கள் என்றும் விமர்சித்தார். பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் சிலர் சதிலீலாவதி படத்தில் பேசியது போல் கொங்குத் தமிழில் பேசும் அடி  கமலுக்கு வேண்டுகோள் விடுத்தனர் அதற்கு பதிலளித்த அவர் நான் இங்கு உங்களது பிரச்சினைகளை பற்றி பேச வந்துள்ளேன் என்றும் என்னால் இங்கு நடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
 
வேண்டுமென்றால் யூட்யூபில் சென்று நீங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்த அவர் நான் ஆடவும் பாடவும் நடிக்கவும் வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் டிக்கெட் வாங்க வேண்டும் என்றும் நகைச்சுவையாக பதிலளித்தார். ஞாயிற்றுக்கிழமை என்பது குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் அதனால் தான் ஜீசஸ் கூட கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துவிடு என்று அழைக்கிறார் என்று தெரிவித்தார்.  வாரத்தில் ஒரு நாளாவது குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 
ஊழலிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்கும் சுதந்திரப் போர் நாள் தான் ஏப்ரல் 6ம் தேதி என்று தெரிவித்தார். தமிழனுக்கு இரத்தத்தில் ஓடுவது ஆல்கஹால் அதனை உடனே நிறுத்த முடியாது என்றும் அவ்வாறு நிறுத்தினால் தமிழகத்தில் பல கொலைகள் விழக்கூடும் என்றும் அவர்களை மன ரீதியாக சரி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். எனக்கு காலில் அடிபட்டது என்பதை தெரிந்த வானதி சீனிவாசன் விருந்தாளிக்கு காலில் அடிபட்டு விட்டது என்று பழங்களை அனுப்பி வைத்திருக்கிறார். 
 
ஆனால் வானதி சீனிவாசனும் விருந்தாளி தான் என்று தெரிவித்தார். கோவையில் வந்து எனக்கு விருந்தோம்பல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்த அவர் உங்கள் தலைவர் இங்கு வரும்பொழுது goback என்று சொல்லுங்களே என்றும் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் பிறந்த பரமக்குடியில் வளர்ந்து சென்னை மும்பை சென்று தற்பொழுது கோவை வந்து இருக்கிறேன் என்று தெரிவித்த அவர் எனக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தெரிவித்தார். எனக்கு எந்த சாயமும் பூச முயற்சிக்க வேண்டாம் என்றும் என் மீது காவியம் ஒட்டாது கருப்பும் ஒட்டாது என்று தெரிவித்தார்.