கமல் ரஜினி இணைப்பு திடீரென வந்த ஐடியாவா? திட்டமிட்டதா?
கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது என்று கிட்டத்தட்ட முடிவு செய்தாகிவிட்டது. இதனை இன்று இருவரும் தனித்தனியே அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.
தமிழக மக்களின் நலனுக்காக கமலஹாசனுடன் கூட்டணி அமைக்க தயார் என்று ரஜினிகாந்த் கூரிய இதே கருத்தை கமலஹாசன் கூறியிருப்பதால் கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவரும் இணைந்து இரண்டு திராவிட கட்சிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு இருப்பது உறுதியாகி வருகிறது
இந்த நிலையில் இந்த முடிவு இன்று திடீரென எடுக்கப்பட்டதா? அல்லது ஒரு சில நாட்களுக்கு முன்னரே திட்டமிட்டதா? என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கமல் மற்றும் ரஜினி ஆகிய இரு தரப்பு ரசிகர்களுக்கும் திடீர் ஷாக் தராமல் கொஞ்சம் கொஞ்சமாக இதுகுறித்து பூடகமாக செய்தியை இருவரும் தந்துள்ளனர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் அன்று ’தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டரை கமல் மூலமாகவே வெளியிட வைத்து இருதரப்பு ரசிகர்களை ஒற்றுமையாக்கியது ஒரு ராஜதந்திரமாக கருதப்படுகிறது. மேலும் கமல் 60 நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசிய போது ’இரண்டு தரப்பு ரசிகர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்ததன் பின்னணியும் இதுதான் என்றும் கூறப்படுகின்றது. இதனை அடுத்து இன்று ஒரே நாளில் மீடியாவை சந்தித்த கமல், ரஜினி ஆகிய இருவரும் ஒரே விதமான கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். எனவே இரு தரப்பு ரசிகர்களையும் ஓரளவு சமாதானப்படுத்திய பிறகு இருவரும் இந்த இணைப்பை தெரிவித்து உள்ளார்கள் என்பதால் ஏற்கனவே இது திட்டமிட்ட இணைப்பாக கருதப்படுகிறது