பேருந்துகள் போதவில்லை என்பது உண்மையில்லை.. ஆம்னி பேருந்துகள் செய்யும் சதி?? – அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற புகார் குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
வார விடுமுறை, முகூர்த்த நாள் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதலாக மக்கள் அதிகமாக பயணம் செய்து வரும் நிலையில் சென்னை கிளாம்பாக்கத்தில் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று இரவு பேருந்துகள் கிடைக்காததால் பயணிகள் பலர் வாக்குவாதத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர் பேசிய அவர் “கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய அளவு பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவு நேரத்தில் மட்டும்தான் பேருந்துகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று முன் தினம் இரவு 133 பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி சென்றுள்ளன. பயணிகள் அதிகரித்துள்ளதால் 130 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால் ஆம்னி பேருந்துகளுக்கு மக்கள் வருவார்கள் என உள்நோக்கத்தோடு சிலர் இப்படி தகவல்களை சித்தரித்து பரப்பி வருகின்றனர்.
கோயம்பேடு பேருந்து நிலையம் இயங்குவதை போன்ற தோற்றத்தை உருவாக்க சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முயல்கின்றனர். முடிச்சூர் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K