வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்
மக்களவையில் இன்று நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிய விவாதத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பல விஷயங்களை பேசி இருக்கிறார். இந்தியா என்பது 150 கோடி மக்களின் பிணைப்பு என்றும் இதற்கு ஆதாரமாக இருப்பது வாக்குகள் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் மக்களவையோ மாநிலங்களவையோ சட்டப்பேரவையோ பஞ்சாயத்துக்களோ வாக்குகள் இல்லாவிட்டால் இதில் எதுவுமே இருக்காது.
நாடு இதுவரை கண்ட அனைத்து சாதனைகளும் வாக்களிப்பதன் மூலமாகத்தான் நிகழ்ந்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவை எல்லாவற்றையும் கைப்பற்ற ஆர் எஸ் எஸ் முயல்வதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார். அது மட்டுமல்ல நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் கையகப்படுத்த ஆர் எஸ் எஸ் முயற்சி செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இவர் கருத்துக்கு ஆளும் தரப்பு எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து தேர்தல் சீர்திருத்தம் குறித்து பேசுமாறு சபாநாயகர் ராகுல் காந்தியை கேட்டுக்கொண்டார். அதோடு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜு தேர்தல் சீர்திருத்தம் குறித்து ராகுல் காந்தி எதுவுமே பேசவில்லை என்று அவர் மீது குற்றம் சாட்டினார். இருந்தாலும் தனது பேச்சை தொடர்ந்த ராகுல் காந்தி ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக தேர்தல் ஆணையம் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இதோடு பல நிறுவனங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் என்றாலும் இது எல்லாவற்றிற்கும் மேலாக முதலில் கைப்பற்றப்பட்டது தேர்தல் ஆணையம் தான். இதோடு அமலாக்கத்துறை தேசிய புலனாய்வு அமைப்பு சிபிஐ போன்ற நிறுவனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையராக யார் வரவேண்டும் என்பதில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகின்றனர்?
வாக்குத்திருட்டை விட பெரிய தேச விரோத செயல் வேறு எதுவுமே கிடையாது என்றும் ராகுல் காந்தி பேசியுள்ளார். இவருடைய இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பேசும்பொழுது நான் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவன் தான். இதில் நான் பெருமைப்படுகிறேன். முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக சமரசம் செய்து கொண்ட கட்சி காங்கிரஸ் கட்சி. நேரு அதிகாரத்தில் இருந்தது முதல் இதுதான் நடந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.