பிரேமலதா சொன்னதை செய்ய வேண்டாம்.. ஓபிஎஸ் பதிலால் புன்னகைத்த முதல்வர் விஜய்..
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இடையே நடந்த விவாதம் அவையில் பெரும் சிரிப்பலைகளையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அவையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் டம்பளர்களில் தண்ணீர் கொடுப்பதற்குப் பதிலாக, பிளாஸ்டிக் பாட்டில்களைத் தவிர்த்து, ஒவ்வொரு சீட்டிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கையாக முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய ஓ. பன்னீர்செல்வம், "சகோதரி நல்ல கருத்தை சொல்லியிருக்கிறார். ஆனால், அவையில் காரசாரமான விவாதங்கள் நடக்கும்போது, யாருக்காவது கோபம் வந்தால் இந்த கண்ணாடி பாட்டில்களை எடுத்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் அபாயம் நேரிடலாம். எனவே, இந்த யோசனை ஏற்புடையதல்ல" என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
ஓபிஎஸ்-இன் இந்தப் பதிலைக் கேட்டு அவையிலிருந்த முதலமைச்சர் விஜய், சபாநாயகர் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலகலப்பாகச் சிரித்தனர். சட்டமன்றத்தில் நடந்த இந்த கலகலப்பான விவாதம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Edited by Siva
