நடுக்கடலில் கப்பலில் மரணம் அடைந்த தூத்துகுடி மாலுமி.. மனைவிக்கு அரசு வேலை கொடுத்த தவெக அரசு..
ஓமன் நாட்டின் கடற்கரை அருகே நங்கூரமிட்டிருந்த 'எம்.டி செலஸ்டியல்' கப்பலில் பணிபுரிந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாலுமி நிஷாந்த் உயிர்த்த நாதன் உடல்நலக்குறைவால் காலமானார். உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததாலும், கப்பல் நிறுவனத்தின் அலட்சியத்தாலும் அவர் உயிரிழந்ததாக இந்திய மாலுமிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கப்பலில் உடலைப் பாதுகாக்க குளிரூட்டும் வசதி இல்லாததால், உடல் சிதைவடைந்த நிலையில் உள்ளதாக சக ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நிஷாந்தின் மறைவு அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவர் போர்க்காலச் சூழலில் உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி தவித்ததாக அவரது மனைவி சரோபின் கண்ணீர் மல்கக் கூறினார். இந்தத் துயரச் சம்பவத்தை அறிந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நிஷாந்தின் உடலை விரைவாகத் தாயகம் கொண்டு வரவும், உரிய இழப்பீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
இதன் ஒரு பகுதியாக, அமைச்சர் ஸ்ரீநாத்தின் பரிந்துரைப்படி, நிஷாந்தின் மனைவி சரோபினுக்கு தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தில் தற்காலிக இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையை மேலாண்மை இயக்குநர் டாக்டர் விஜய கார்த்திகேயன் வழங்கினார். அரசின் இந்த விரைவான நடவடிக்கை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஓரளவிற்கு ஆறுதலைத் தந்துள்ளது. இதற்கிடையில், கப்பல் நிறுவனம் மீது உரிய விசாரணை நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
Edited by Siva
