செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (13:22 IST)

மும்மொழி கொள்கையவா எதிர்க்குறீங்க? – திமுகவுக்கு லிஸ்ட் தயாரிக்கும் எச்.ராஜா!

மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்து எச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் இருமொழி கொள்கையே அமலில் இருக்கும் என்றும், மும்மொழி கொள்கையை ஏற்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த முடிவிற்கு மு.க.ஸ்டாலின், பாமக ராமதாஸ் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் இந்த முடிவு குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழே படிக்காமல் நம் குழந்தைகள் வளர்வதற்கு தேசிய கல்விக் கொள்கை முற்றுப்புள்ளி வைக்கிறது. அதை எதிர்ப்பது தமிழ் விரோதம் என கூறியுள்ளார்.

மேலும் மும்மொழி கொள்கைக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து பதிவிட்டுள்ள அவர் “இது 1960கள் அல்ல. ஏற்கனவே திமுக முன்னனி தலைவர்கள் நடத்தும் மும்மொழி பள்ளிகள் பட்டியல் வெளியிட்டுள்ளேன். மேலும் தமிழகம் முழுவதும் திராவிட இயக்க தலைவர்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் பட்டியல் எடுக்கும்படி தேசிய சிந்தனையாளர்களிடம் கேட்டுள்ளேன்.இவர்களின் இரட்டை வேடம் கிழிக்கப்படும்” என கூறியுள்ளார்.

தற்போது மும்மொழி கொள்கைக்கு எதிராகவும், ஆதரவாகவும் குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.