கனமழை: தமிழகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், காவிரி மேலாண்மை ஆணையம் கூறாமலேயே கர்நாடக முதல்வர் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தவிட்டார்.
அதன்படி, தமிழகத்திற்கு நொடிக்கு 45,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. நேற்று மட்டும் சுமார் 3 டிஎம்சி தண்ணீர் கபிணி அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு கர்நாடக அணையான கிருஷ்ணராஜா அணை, அதன் முழுக்கொள்ளளவான 124.80 கன அடியில் 110.40 அடியை எட்டியுள்ளதால், அதிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய நீர்வளத்துறை தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி தமிழகத்திற்கு மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.