1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 21 மே 2020 (17:07 IST)

எப்படியும் தேர்வை நடத்தியே தீருவோம் – பள்ளிக்கல்வித்துறை செய்த அடுத்த ஏற்பாடு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறையாத நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதில் உறுதியாக உள்ளது பள்ளிக்கல்வித்துறை.

தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டன. பிறகு அடுத்த மாதம் ஜூன் முதல் தேதியிலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நாளே தேர்வுகள் தொடங்குவதில் உள்ள சிரமங்களை பல கட்சிகளும், மக்களும் கூறி வந்தனர். இந்நிலையில் இன்று முதலைமைச்சருடன் ஆலோசித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வுகளை ஒத்தி வைத்து புதிய தேர்வு அட்டவணையை வழங்கியுள்ளார்.

அதன் படி ஜூன் 15 முதல் 25ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தலாம் என்று புதிய அட்டவணையைப் பள்ளிக் கல்வித் துறை நேற்று முன் தினம் வெளியிட்டது. ஆனால் கொரோனா வேகமாக பரவும் இந்த நேரத்தில் மாணவர்களின் உயிரோடு விளையாடக் கூடாது எனவும் குரல்கள் எழுந்துள்ளன. ஆனாலும் எப்படியாவது தேர்வை நடத்தியே தீருவது என்ற முடிவில் உள்ளது பள்ளிக்கல்வித்துறை.

இது சம்மந்தமாக பேசியுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ‘பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதன் ஒரு கட்டமாக தேர்வு மையங்கள் 3,684 இல் இருந்து, 3 மடங்கு அதிகரித்து 12,674 மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.