10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து! – அமைச்சர் செங்கோட்டையன்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணைகள் வெளியாகி உள்ள நிலையில் மாணவர்களை வீடுகளுக்கே சென்று அழைத்துவர சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்வதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசு 10ம் வகுப்பு பொது தேர்வுகளை ஜூன் மாதம் நடத்துவதாக அறிவித்திருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் திட்டமிட்டபடி தேர்வை நடத்துவதில் தமிழக அரசு தீர்மானமாக உள்ளது. தேர்வுகளுக்கான கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிராமத்தில், பேருந்து வசதிகள் இல்லாத பகுதிகளில் உள்ள மாணவர்கள் தேர்வுக்கு வர பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும் என பலர் வாதிட்டனர். இந்நிலையில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி தேர்வு எழுத இருக்கும் பள்ளி மாணவர்களின் முகவரி விவரங்கள் பெறப்பட்டு சிறப்பு பேருந்துகள் மூலம் அவர்கள் தேர்வு மையத்திற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும், மேலும் தேர்வு முடிந்ததும் மீண்டும் மாணவர்கள் பாதுகாப்பாக சிறப்பு பேருந்துகள் மூலமாகவே வீடுகளில் சேர்க்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
ஆனால் எதிரே உள்ள சில நாட்களுக்குள் தமிழகம் முழுவதும் இந்த வசதியை ஏற்படுத்துவதில் சிரமங்கள் உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.