திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 மே 2020 (14:43 IST)

எல்லாருக்கும் பாஸ் மார்க் போட ஒப்புதல் அளிக்கவில்லை! – அமைச்சர் செங்கோட்டையன்!

கொரோனா ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்த முக்கியமான தகவலை தெரிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. மார்ச் 20 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து பள்ளி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்ட நிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் நடத்த இயலாது என்பதால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் நடத்தவும், 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இதற்கு பிறகு தேர்வு நடத்துவது எளிதான காரியம் அல்ல. எனவே அவர்களுக்கு முழு தேர்ச்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில அரசியல் கட்சிகள் கூறிவந்தன. எனினும் ஊரடங்கு முடிந்த பிறகு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் “10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே தனிமனித இடைவெளியுடன் தேர்வுகள் நடத்தப்படும்” என கூறியுள்ளார்.