கொரோனா பயம் இருக்க நேரத்துல இது தேவைதானா? – திமுக எம்.பி கண்டனம்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் தமிழக அமைச்சர்கள் தேவையில்லாமல் கூட்டம் கூட்டுவதாக திமுக எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கலில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கால் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வந்தனர். அவர்களை வரவேற்க பெருந்திரளான மக்கள் கூட்டம் சாலைகளின் இருப்பக்கமும் இருந்தனர். முன்னதாக மதுரையில் அடிக்கல் நாட்டு விழாவின்போதும் ஏராளமான மக்கள் முதல்வரை வரவேற்க கூடியிருந்தனர்.
இதற்கு கண்டனங்களை தெரிவித்துள்ள திமுக எம்.பி மாணிக்கம் தாகூர் ”உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. பல நாடுகள் பொது நிகழ்ச்சிகள், அரசு விழாக்களை ரத்து செய்துள்ளன. ஆனால் தமிழகத்தில் மட்டும் முதல்வரை வரவேற்க ஏராளமான அப்பாவி மக்களை சாலையில் நிறுத்தி சிக்கலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “முதல்வரை மகிழ்விப்பது மட்டுமே அமைச்சர்களின் வேலையல்ல. அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றோர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.