ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2024 (07:42 IST)

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை: திமுக எச்சரிக்கை

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் திமுக சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  ஒரே நாடு ஒரே தேர்தல் உயர்நிலைக் குழுவுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:
 
ஏற்கெனவே 23.12.2023 அன்று சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்த திமுகவின் கருத்துகளை கோரியது. இதற்கு திமுக தன்னுடைய 12.1.2023 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்குப் பிறகு நேரடி விசாரணைக்கு எவ்வித தகவலும் திமுகவுக்கு அனுப்பப்படவும் இல்லை. அந்த சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு தொடர் நடவடிக்கையும் என்னவென்று தெரியவில்லை.
 
இதில் கவனிக்கதக்க முக்கிய அம்சம் என்னவென்றால், 2022-ல் சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் , மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது சம்பந்தமாகத்தான் ஆலோசனைகளைக் கோரியது. ஆனால், தற்பொழுது மத்திய அரசு இதை விரிவுபடுத்தி நாடாளுமன்ற மற்றும் மாநில சட்ட சபைகளோடு, நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஆய்வு வரம்புகளை வெளியிட்டுள்ளது. இந்தச் செயல் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், குடியரசு தலைவர் முறையிலான ஆட்சியை நோக்கியும் செல்வதாகும்.

 
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழு துவக்கத்திலிருந்தே சட்டவிரோதமானதும் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதும் ஆகும். மேற்குறிப்பிட்ட உயர் மட்ட குழுவானது, அரசியலமைப்பு பிரிவு 73-ன் கீழ் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்ட நிர்வாக அதிகாரத்தின் மூலம் அமைக்கப்பட்டதாகும். மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு உயர்வானது அல்ல. சட்டமியற்றும் அதிகாரம் உள்ளவற்றில் மட்டும்தான் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும் என்று வகுத்துள்ள அரசியல் சட்டத்துக்கு விரோதமானதாகும் என்பதால் இந்த உயர் நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளதே செல்லாத ஒன்றாகும்.
 
மாநில அரசின் பட்டியலில் உள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துகளின் தேர்தல் நடைமுறை பற்றி விசாரிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள இந்த உயர்நிலைக் குழுவுக்கு அதிகாரமில்லை என்பது திமுகவின் திட்டவட்டமான கருத்தாகும். அது மட்டுமின்றி இந்த உயர்நிலைக்குழு சட்டவிரோதமானது. அரசியல் சட்டத்துக்கு புறம்பானது. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பின்வரும் காரணங்களினால் சாத்தியமற்றது என்பதை திமுக ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறது.
 
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறை முற்றிலுமாக நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள “சுதந்திரமான, நேர்மையான” தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது. அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.
 
ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலும் அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதாலும் இந்த நடைமுறையை திமுக எதிர்க்கிறது.
மத்திய ஆளுங்கட்சியும் மெஜாரிட்டியை இழந்தால் ஆட்சி கவிழும். அதுபோன்ற நிகழ்வில் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முன்னெடுப்புக்கு மீண்டும் இடையூறு ஏற்படும் என்பதைக் கூட ஆலோசிக்காமல் “ஒரே நாடு ஒரே தேர்தல்” முயற்சி நடப்பது நடைமுறை சாத்தியமற்றது.
 
ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது. அச்சட்டம் வகுத்து தந்துள்ள மத்திய, மாநில உறவு அடங்கிய கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஜனநாய நடைமுறையை பலவீனப்படுத்துவதாகும்.
 
ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் இடையே தேர்தல் களத்தில் சம நிலையிலான போட்டியை ஏற்படுத்தி தராது.
உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்த முயற்சிப்பது எழுத்தறிவு இன்னும் பெற வேண்டிய கிராமப்புற மக்கள் மத்தியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
 
ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் அதை எதிர்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு, தேர்தல் ஆணையர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு எல்லாம் இப்போது இருப்பது போல் 10 மடங்கு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். தேர்தல் அதிகாரிகளின் எண்ணிக்கை இப்போது இருப்பதை விட 3 முதல் 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதால் கட்டுக்கடங்காத செலவினத்தை ஏற்படுத்தும் என்பதால் இது நடைமுறை சாத்தியமற்றது.
 
நகராட்சிகளும், பஞ்சாயத்துகளும் மாநில அரசின் நிர்வாக அமைப்புகள் என அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. ஆகவே இவற்றுக்கும் சட்டமன்றம், நாடாளுமன்றத்துடன் தேர்தல் என்பது அரசியல் சட்ட விரோதமானது. இத்தேர்தல் முழுக்க முழுக்க மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருப்பதாகும்.
ஒரே நேரத்தில் நகராட்சி, பஞ்சாயத்து, சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் போதிய வாக்குப்பதிவு இயந்திரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கே பல லட்சம் கோடி ரூபாயை செலவிட வேண்டிய நிதி சுமை தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படும் என்பதால் இந்த தேர்தல் நடைமுறையால் நிதி சிக்கனம் ஏற்படாது.
 
ஓரே நேரத்தில் தேர்தலை திணிப்பதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது மாநில உரிமை மற்றும் அரசியல் சட்டத்தால் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிப்பதாகும். இது மத்திய – மாநில அரசு உறவுகளில் மட்டுமல்ல, மத்திய அரசுக்கே கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து மிக்க முயற்சி.
மத்திய மாநில அரசு உறவுகளுக்கும், மத்திய அரசுக்குமே அச்சுறுத்தலாக இருக்கும் இது போன்ற தேர்தல் நடைமுறை பற்றிய முடிவினை உயர்நிலைக்குழு விளையாட்டாக எடுத்து அதிகாரப் பசியுடன் இருக்கும் மத்திய பாஜக அரசை திருப்திப்படுத்த நினைக்க கூடாது.
 
அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் அரசியல் சட்டத்தை நமது அரசியல்சட்டத்தை உருவாக்கியவர்கள் சிந்தித்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசியல் சட்டத்தை சிதைக்கவோ,உருமாற்றவோ, விரைவில் மக்களால் நிராகரிக்கப்படும் நாடாளுமன்ற மெஜாரிட்டி உள்ளோரின் சுயநலத்துக்கு உயர்நிலைக்குழு துணை போக கூடாது.
 
இறுதியாக, மேற்குறிப்பிட்ட அனைத்து காரணங்களினால் நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற நடைமுறையை மிக கடுமையாக எதிர்க்கிறது. ஆகவே, உயர்நிலைக் குழு இது தொடர்பான தனது விசாரணையை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் திமுக சட்டத்தின் வழி கொண்டு பொருத்தமான நடவடிக்கையை எடுக்க தள்ளப்படும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva