1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (12:51 IST)

110 ஜோடிகளுக்கு திருமணம்..! போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த சாலை..!!

wedding
தை மாத கடைசி முகூர்த்த நாளான இன்று கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் 110 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
 
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோயில் உள்ளது. இது 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.  

திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதிக்கு திருவந்திபுரம் தேவநாதசாமி, அண்ணன் என்பதால் திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு அங்கு செல்ல இயலாதவர்கள் திருவந்திபுரத்தில் வந்து நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.
 
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் திருமணம் செய்து கொண்டால் தங்கள் வாழ்க்கை சிறக்கும் என்பதால் ஏராளமானோர் முகூர்த்த நாட்களில் திருமணம் செய்து கொள்கின்றனர். 
 
இந்நிலையில் தை மாத கடைசி முகூர்த்த நாளான இன்று கோயிலில் உள்ள அவுஷதகிரி மலையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் செய்து கொள்ள ஏராளமான மணமக்கள் தங்கள் உறவினர்களுடன் குவிந்தனர். இதனால் கோயிலை சுற்றிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 
 
crowd
மேலும் திருமணம் முடிந்து சாமி தரிசனம் செய்ய சென்ற மணமக்களால் கோயிலிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. 


திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் 110 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  மேலும் கடலூர் பண்ருட்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.