1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Senthil Velan
Last Updated : சனி, 10 பிப்ரவரி 2024 (12:05 IST)

ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம்.! கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்ட பக்தர்கள்..!

theratorm
108 திவ்ய தேசங்களில் ஒன்றான  ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என முடக்கமிட்டனர்.
 
திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் தை மாத பிரமோற்சவவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர் எழுந்துருளி,  நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
 
தை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான இன்று 48 அடி உயரமும், 21 அடி அகலமும் 75 டன் எடை கொண்ட திருத்தேர் பவனி நடைபெற்றது.
 
முன்னதாக நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை, பிஎஸ்என்எல், மின்சார துறை மற்றும் வீரராகவர் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் தேரடியில் அமைந்துள்ள தேரினை பார்வையிட்டு தேரின் பராமரிப்பை குறித்து ஆய்வு செய்தனர். 
 
veera ragava temple
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில்  ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவில் திருத்தேர் பவனி பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர்,சென்னை காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் ஸ்ரீ வீரராகவ பெருமானை தரிசித்து வருகின்றனர்.

 
ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் நோயை தீர்க்க வல்லவர் என்பதால் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தில் கொட்டி தங்கள்  வேண்டுதலை நிறைவேற்றினர்.