ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 8 பிப்ரவரி 2024 (09:55 IST)

எருமை கிடா வெட்டும் வினோத நிகழ்ச்சி..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.!!

temple
ராசிபுரம் அருகே பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டுக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.  
 
பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அலகு குத்தியும், கரகம் எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மேலும், தீக்குண்டம் இறங்கியும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதைத்தொடர்ந்து மாலையில் எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. 
 
இதில், 20க்கும் மேற்பட்ட எருமைக் கிடாக்களை நேர்த்தி கடனாக பக்தர்கள் கோவிலுக்கு வழங்கினர்.  இந்த எருமைக் கிடாக்களின் மீது கோவில் பூசாரி தண்ணீரை தெளித்தார். இதில் முதலில் துளுக்கிய எருமைக் கிடாவை ஒருவர் ஆக்ரோஷமாக வெட்டினார்.


eruma cutting
பின்னர் அந்த எருமை கிடாவை கோவிலின் அருகில் தோண்டப்பட்டிருந்த பெரிய குழியில் போட்டு மூடினர். இந்த வினோத வழிபாடு கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 


எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.  இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தாக்கள், விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.