வைத்தீஸ்வரன் கோவில் தேரோட்டம் கோலாகலம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தை செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ தையல்நாயகி உடனாகிய ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாகும். இந்த கோவில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு நிகராகவும் போற்றப்படுகிறது.
பிரசித்தி பெற்ற கோவிலில் செல்வ முத்துக்குமாரசாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு தை செவ்வாய் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு தை செவ்வாய் உற்சவம் கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான 9 ஆம் நாள் திருத்தேர் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
செல்வ முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள கோவில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். நான்கு ரத வீதிகளை வலம் வந்த தேருக்கு வீதிகள் தோறும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.