ஒரு ஃபேன், இரண்டு லைட்டுகள் உள்ள வீட்டிற்கு ரூ.128 கோடி கரண்ட் பில்! அதிர்ச்சி தகவல்
மின்சார கட்டணம் திடீர் திடீரென லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கில் ஒருசில சிறிய வீடுகளுக்கு வந்து உள்ளது என்பது குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வசித்து வரும் முதியவர் ஒருவருக்கு ரூபாய் 128 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்துமாறு பில் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரது வீட்டில் இரண்டு லைட்டுகள் மற்றும் ஒரே ஒரு ஃபேன் மட்டுமே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹப்பூர் என்ற பகுதியில் ஷமீம் என்ற முதியவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இவரது வீட்டில் இருவர் மட்டுமே இருப்பதால் ஒரு ஃபேன் மற்றும் இரண்டு லைட்டுகள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் எப்போதும் இவரது வீட்டிற்கு மிக சிறிய தொகையே மின்கட்டணமாக வந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த மாதம் ரூபாய் 121 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்சார வாரியம் பில் அனுப்பி உள்ளது
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முதியவர் ஷமீம் மின்சார அலுவலகத்தை அணுகி மின்சார பில்லில் பிழை இருப்பதாகவும் அதனை சரி செய்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மின்சார வாரிய ஊழியர்கள் கொஞ்சம் கூட பொறுப்பின்றி பில்லில் இருக்கும் கட்டணத்தை காட்டுமாறு கூறியுள்ளனர். அவ்வளவு பெரிய தொகையை நாங்கள் எப்படி கட்டுவோம், எங்கள் வீட்டில் ஃபேன், லைட் தவிர எதுவுமே இல்லை என்று கூறிய போதிலும் கட்டணம் செலுத்தத் தவறியதால் அவரது வீட்டிற்கு வழங்கிய மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், 'இது தொழில்நுட்பக்கோளாறு காரணம் என்றும் பாதிக்கப்பட்டவர் நேரில் பில்லுடன் வந்தால் சரி செய்து கொடுப்போம் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது