ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: அமைச்சர் பிரியங்க் கார்கே
கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் குறித்து மீண்டும் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
100 ஆண்டுகள் பழமையான இந்த அமைப்பை "நம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்" என்று குறிப்பிட்ட அவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பதை பகிரங்கமாக தணிக்கை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் பாகிஸ்தானுக்காக லாபி செய்யும் நபர்களோடு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு வைத்துள்ளதாக குற்றம் சாட்டிய கார்கே, "நாட்டின் மிகப்பெரிய என்.ஜி.ஓ என உரிமை கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ், அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி முறைப்படி தங்களை பதிவு செய்ய வேண்டும் . தங்களது வருமானம் மற்றும் நிதி பரிவர்த்தனைகளை பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்க ஏன் அஞ்சுகிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், சமீபத்தில் நடந்த விஜயதசமி அணிவகுப்பில் எந்தவொரு முன்னணி தலைவரின் மகன்களாவது சீருடை அணிந்து பங்கேற்றார்களா என்றும் அவர் சாடினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தங்கள் குறித்துக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில், பிரியங்க் கார்கேவின் இந்த அதிரடி பேச்சு தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

