ஜேஇஇ முதன்மை தேர்வு, யுஜிசி நெட் , க்யூட் பிஜி தேர்வு தேதி வெளியீடு..
தேசியத் தேர்வு முகமை வரும் கல்வி ஆண்டிற்கான ஜேஇஇ முதன்மை தேர்வு, யுஜிசி நெட் மற்றும் க்யூட் பிஜி உள்ளிட்ட முக்கிய நுழைவு தேர்வுகளுக்கான தற்காலிக தேதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 14 நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. நிர்வாக காரணங்கள் அல்லது எதிர்பாராத சூழல்களை கருத்தில் கொண்டு இந்த அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி, பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 22 முதல் 24 வரையிலும், ஜனவரி 28 முதல் 30 வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யுஜிசி நெட் தேர்வு இந்த ஆண்டு டிசம்பர் 14 முதல் 19 வரையிலும், சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளிலும் திட்டமிடப்பட்டுள்ளன.
க்யூட் பிஜி படிப்புக்கான தேர்வு மார்ச் மாதத்தில் பல கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இது தவிர, சிமேட் மற்றும் சைனிக் பள்ளிகள் நுழைவுத் தேர்வுகளும் இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் நடைபெறவுள்ளன. தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்தத் தற்காலிக அட்டவணையின் அடிப்படையில் தங்களின் தயாரிப்புப் பணிகளைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Siva

