நீட் தேர்வுக்காக இந்தியாவில் டெலிகிராம் தடை: வாட்ஸ்அப் தப்பியது எப்படி?
ஜூன் 21 அன்று நடக்கவுள்ள நீட் மறுதேர்வை முன்னிட்டு, தேசிய தேர்வு முகமையின் பரிந்துரையின் பேரில் இந்திய அரசு டெலிகிராம் செயலியை தடை செய்துள்ளது. டெலிகிராம் சேனல்கள் மூலம் போலி வினாத்தாள்கள் விற்கப்படுவதும், வதந்திகள் பரப்பப்படுவதும் இத்தடைக்கு முக்கிய காரணமாகும். அதே நேரத்தில், இதே போன்ற வசதிகளை கொண்ட வாட்ஸ்அப் ஏன் தடை செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு முக்கிய காரணம் டெலிகிராமின் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டு தன்மையாகும். டெலிகிராமில் பயனர்கள் தங்களின் மொபைல் எண்களை மறைத்துவிட்டு, வெறும் பயனர் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு செயல்பட முடியும். மேலும், இதில் லட்சக்கணக்கான சந்தாதாரர்களை கொண்ட சேனல்களை உருவாக்கி, அடையாளம் தெரியாமல் மோசடிகளில் ஈடுபடுவது எளிதாகிறது. ஆனால், வாட்ஸ்அப்பில் மொபைல் எண் கட்டாயமாக தேவைப்படுவதால் குற்றவாளிகளை கண்டறிவது எளிது.
டெலிகிராமில் உள்ள 'மெசேஜ் எடிட்' வசதியை பயன்படுத்தி, பழைய பதிவுகளை மாற்றி போலி வினாத்தாள் கசிவு போன்ற வதந்திகளை பரப்பியுள்ளனர். மேலும், வாட்ஸ்அப் நிறுவனம் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு உடனடியாக ஒத்துழைப்பு அளிப்பதோடு, ஏஐ கருவிகள் மூலம் பொது குழுக்களை கண்காணித்து வருகிறது. ஆனால், டெலிகிராம் நிறுவனம் இத்தகைய கண்காணிப்பில் பின்தங்கியுள்ளதாலும், இந்தியாவில் அதற்கு அலுவலகம் இல்லாததாலும் அதன் மீது இந்தத் தடை நடவடிக்கை பாய்ந்துள்ளது.
Edited by Siva
