யாரை ஏமாற்றுகிறார் ஓபிஎஸ்..! அதிமுக மெகா கூட்டணி அமைக்கும்..! கேபி முனுசாமி.!!
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்று கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களின் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்தன. தற்போது கருத்து வேறுபாட்டால் அதிமுகவும் பாஜகவும் தனித்தனியே மக்களவை தேர்தலில் களம் காண்கின்றனர்.
பாமக மற்றும் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவும் அதிமுகவும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, மக்களவைத் தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தரம் தாழ்ந்த டிடிவி தினகரன் குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை என்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி ஓபிஎஸ் யாரை ஏமாற்றுகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், தேமுதிக கேட்ட தொகுதிகளை அதிமுக தராததால் அந்தக் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது. அப்போது பேசிய தேமுதிகவின் எல்.கே சுதீஷ், கே.பி முனுசாமியை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.
இதனால் கே.பி முனுசாமி மீது தேமுதிக அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா என்பது சந்தேகம் தான்.