ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கியதிலிருந்தே திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.திமுக மக்கள் விரோதி ஆட்சி.. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் உங்களை விரட்டியடிப்பார்கள் என்றெல்லாம் மேடைகளில் பேசி வருகிறார். சமீபத்தில் புதுச்சேரியில் பேசியபோதும் கூட திமுகவை நம்பாதீர்கள் என்று பேசினார் விஜய்.
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் வாங்கும் கணிசமான வாக்கு வாக்குகள் திமுகவின் வெற்றியை பாதிக்கும் என சிலர் சொல்கிறார்கள். சிலரோ விஜய் வாக்குகளை பிரிப்பதால் திமுகவுக்குதான் நன்மை என்றும் சொல்கிறார்கள். இந்நிலையில் நடிகரும், பெரியார் கொள்கைகள் மீது பற்று கொண்டவருமான சத்யராஜ் பல மேடைகளிலும் தொடர்ந்து விஜய்க்கு எதிரான கருத்துக்களை மறைமுகமாக கூறி வருகிறார். ஒருபக்கம் அவரின் மகள் திவ்யா சில மாதங்களுக்கு முன்பு தன்னை திமுகவிலும் இணைத்து கொண்டார். பேசும் மேடைகளில் விஜயை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் வெல்லும் தமிழ் பெண்கள்.. மகளிர் உரிமை தோட்டத்தில் இரண்டாவது கட்ட விரிவாக்க நிகழ்வில் பேசிய சத்யராஜ் தந்தை பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் கொண்ட கனவுதான் பெண்களின் இந்த வளர்ச்சி.. நூறு வருட திராவிட இயக்கத்தின் வீச்சுதான் இங்கிருக்கும் பெண்கள்.. எதைப் பார்த்தும் ஏமாந்து விடாதீர்கள்.. சாதனைகளின் பக்கம் நில்லுங்கள் என்று பேசி இருக்கிறார்.
அதாவது தவெகவிற்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்பதைத்தான் சத்யராஜ் மறைமுகமாக சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அவரை திட்ட துவங்கியிருக்கிறார்கள்.