மார்வெல் காமிக்ஸின் பிரபலமான சூப்பர் ஹீரோக்களான டெட்பூல் மற்றும் வுல்வரின் புதிய Deadpool and Wolverine படத்தின் மூலமாக மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணைகின்றனர்.
சூப்பர்ஹீரோ படங்கள் பலவற்றை தயாரித்து உலகம் முழுவதும் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளது மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம். கடந்த 2008ல் தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இதுவரை 33 திரைப்பரங்களும் 12 வெப் சிரிஸ்களும் வெளியாகியுள்ளது. அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்மேன், மார்வெல்ஸ் வரிசையில் தற்போது இதில் டெட்பூலும், வுல்வரினும் இணைகின்றனர்.
இந்த இரண்டு சூப்பர் ஹீரோக்களுக்குமே ஏற்கனவே தனி படங்கள் வந்திருந்தாலும் அவை ஃபாக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது மார்வெல் இவற்றை வாங்கி தங்களுடைய மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணைத்துள்ளனர்.
இந்த Deadpool and Wolverine படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஆரம்பமே டிவிஏ (டைம் வேரியண்ட் அத்தாரிட்டி) ஆட்கள் வந்து வேட் வில்சனை (டெட்பூல்) சிறைப்பிடித்து செல்கின்றனர். இந்த டிவிஏ அமைப்பு மல்டிவெர்ஸ் ஒன்றுடன் ஒன்று குலையாமல் காலத்தை அதன் நேர்வரிசையில் நிர்மாணிக்கும் அமைப்பு. ஆனால் லோகி தொடரில் ஏற்பட்ட திருப்பங்களால் மல்டிவெர்ஸில் பிரச்சினை எழுந்துள்ளது.
இந்நிலையில் வேறு யுனிவர்ஸிலிருந்து மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் நுழையும் டெட்பூலும், வுல்வரினும் என்ன மாதிரியான சாகசங்களில் ஈடுபட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக ட்ரெய்லர் அமைந்துள்ளது. ட்ரெய்லரில் அனைவரது விருப்பமான வுல்வரின் (ஹ்யூ ஜாக்மேன்) காட்டப்படாததால் அவரது தோற்றம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த திரைப்படம் ஜூலை 26ம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெளியாகிறது.