வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (12:55 IST)

தந்தை யோகராஜ் பற்றி யுவ்ராஜ் சொன்னது என்ன…? தோனி ரசிகர்கள் பதில்!

இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. அதனால் அவர் ஓய்வை அறிவித்தார்.

ஆனால் யுவ்ராஜ் சிங் கேரியர் விரைவில் முடிந்ததற்கு தோனிதான் காரணம் என்று யுவ்ராஜின் தந்தை யோக்ராஜ் சிங் கடந்த சில ஆண்டுகளாக தோனி மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். இது சம்மந்தமாக அவர் சமீபத்தில் பேசியபோது ““தோனியை நான் மன்னிக்கவே மாட்டேன். என் மகன் யுவ்ராஜ் சிங்கின் வாழ்க்கையை அவர் அழித்துவிட்டார். அவர் இன்னும் 5 ஆண்டுகள் வரை இந்திய அணிக்காக விளையாடி இருக்கக் கூடியவர். யுவ்ராஜ் போல ஒரு வீரர் கிடைக்க மாட்டார் என கம்பீர், சேவாக் ஆகியோர் கூறியுள்ளார். யுவ்ராஜ் சிங்குக்கு பாரத ரத்னா விருதே கிடைத்திருக்க வேண்டும்.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் யுவ்ராஜ் சிங் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் தன்னுடைய தந்தை பற்றி பகிர்ந்துள்ள விஷயத்தை தோனி ரசிகர்கள் எடுத்துக் கூறி பதிலளித்து வருகின்றனர். அதில் யுவ்ராஜ் “எனது தந்தை மிகவும் சிறுவயதில் இருந்தே மிகவும் கண்டிப்பானவர். போட்டிகளில் நான் சரியாக விளையாடவில்லை என்றால் என்னை வீட்டில் சேர்க்க மாட்டார். அதனால் பல நாட்கள் நான் காரிலேயே படுத்துக் கொள்வேன். சதம் அடித்து மகிழ்ச்சியோடு வந்தால், ஏன் இரட்டை சதம் அடிக்கவில்லை எனத் திட்டுவார். எங்கள் வீட்டில் அடிக்கடி என் அம்மாவுக்கும் என் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை நடந்துகொண்டே இருக்கும். அப்போது எனக்கு வீட்டில் நிம்மதியே இருக்காது. ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் பிரிந்தார்கள்.” எனப் பதிவு செய்துள்ளார்.