திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2024 (11:15 IST)

யுவ்ராஜ் சிங்கின் வாழ்க்கையை தோனி அழித்து விட்டார்… யோகராஜ் சிங் ஆதங்கம்!

இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது.

ஒரு கட்டத்தில் வெளிநாட்டுப் போட்டிகளிலாவது விளையாடலாம் என முடிவு செய்த அவர் கடந்த ஆண்டு இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் தற்போது சில வெளிநாட்டு தொடர்களிலும் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். ஆனால் இரண்டு உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த ஒரு வீரரை முறையான மரியாதை செலுத்தி ஓய்வு பெறவைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் தற்போது யுவ்ராஜின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததற்குக் காரணம் தோனிதான் என தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “தோனியை நான் மன்னிக்கவே மாட்டேன். என் மகன் யுவ்ராஜ் சிங்கின் வாழ்க்கையை அவர் அழித்துவிட்டார். அவர் இன்னும் 5 ஆண்டுகள் வரை இந்திய அணிக்காக விளையாடி இருக்கக் கூடியவர். யுவ்ராஜ் போல ஒரு வீரர் கிடைக்க மாட்டார் என கம்பீர், சேவாக் ஆகியோர் கூறியுள்ளார். யுவ்ராஜ் சிங்குக்கு பாரத ரத்னா விருதே கிடைத்திருக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.