ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 3 மே 2024 (07:27 IST)

கே எல் ராகுல் ஏன் இந்திய அணியில் இடம்பெறவில்லை… அஜித் அகார்கர் சொன்ன காரணம்!

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன. 20 அணிகள் மோதுகின்ற நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளனர்.

இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பல முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. அதில் ஒருவராக கே எல் ராகுல் இருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பைக்கு பிறகு அவருக்கு டி 20 அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவருக்கு டி 20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “கே எல் ராகுல் ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறார். உலகக் கோப்பையில் எங்களுக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான் தேவை. தொடக்க ஆட்டத்துக்கு காம்பினேஷன் இருக்கிறது.  அதனால்தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளோம்.  சஞ்சு சாம்சன் எந்த இடத்திலும் இறங்கி ஆடுவார். அதனால் சிறந்த வீரர்கள் என்பதைப் பற்றி நாங்கள் யோசிக்கவில்லை. எங்களுக்கு என்ன தேவை என்பதைப் பற்றியே நாங்கள் யோசித்தோம்” எனக் கூறியுள்ளார்.