திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 2 மே 2024 (08:10 IST)

டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி… நிறை என்ன? குறை என்ன?

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன. 20 அணிகள் மோதுகின்ற நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளனர்.

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ரவீந்தர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், ஜாஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ். ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு விதமான கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. முதலில் பாசிட்டிவ் அம்சமாக சீனியர் மற்றும் இளம் வீரர்கள் கொண்ட கலவையான அணியாக இந்த அணி உள்ளது. சமீபத்தில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது ஆகியவை சொல்லப்படுகின்றன.

அதே போல குறையாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் ஆடுவதற்கு எதற்கு நான்கு ஸ்பின்னர்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. கண்டிப்பாக நான்கு பேரையும் பயன்படுத்தப் போவதில்லை என்பதால் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பளித்திருக்கலாம். அணியில் அக்ஸர் படேல், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே போன்ற மூன்று ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இதில் யாரை அணியில் விளையாட வைக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் முகமது சிராஜ் கடந்த சில மாதங்களாக சொதப்பி வருவதால் அவரை அணியில் எடுத்ததற்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிறப்பாக பந்துவீசி வரும் சந்தீப் ஷர்மா, நடராஜன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்காததும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.