தாய்நாட்டில் மண்ணைக் கவ்விய இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக மூன்று மாதங்களுக்கு மேலாக சர்வதேசப் போட்டிகள் நடக்காத நிலையில் ஜூலை 8 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்தனர். முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 204 ரன்கள் சேர்தத்து இங்கிலாந்து. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேப்டன் ஹோல்டர் அதிகபட்சமாக 6 விக்கெட்களை வீழ்த்தினார். இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 43 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெய்ட்(65) மற்றும் விக்கெட் கீப்பர்(61) அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 318 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்களும், ஸ்டோக்ஸ் 4 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 114 ரன்கள் பின் தங்கிய இங்கிலாந்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடியது. இரண்டாவது இன்னிங்ஸில் நிதானமாக விளையாடி 313 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸூக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதைத் துரத்திய அந்த அணியில் முதலில் விக்கெட்கள் விழுந்தாலும் அந்த அணியின் ஜெராமைன் பிளாக்வுட் நிதானமாக விளையாடி 95 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.