திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 13 ஜூலை 2020 (10:02 IST)

லேட்டு லேட்டு லேட்டு... சீமானிடம் டைமிங் சென்ஸ் மிஸ்ஸிங்!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிபிஎஸ்இ பாடதிட்டம் குறைப்பை கண்டித்து தாமதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால், 30% பாடங்கள் குறைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்தது. இதனடிப்படையில் மதச்சார்பின்மை, குடியுரிமை, கூட்டாட்சி போன்ற பல பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. 
 
இந்நிலையில் இது குறித்து சீமான தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு, கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் யாவும் மூடப்பட்டுள்ள நிலையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-12ஆம் வகுப்புக்கான பாடங்களை 30 விழுக்காடு குறைப்பதாகக் கூறி, இந்திய அரசியலமைப்புச்சட்டத்திலுள்ள அடிப்படையானக்கருத்துகளை மொத்தமாக நீக்கியிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. 
 
தற்காலப்பேரிடர் சூழலிலும் தனது ஒற்றைமயமாக்கல் நடவடிக்கைகளை வீரியமாய்ச் செய்து வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, அதன் நீட்சியாகவே தற்போது பாடத்திட்டத்தில் கைவைத்து, இந்நாட்டின் அடிப்படைக்கட்டமைப்புத் தூண்களாக இருக்கிற சனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை போன்றவற்றைப் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கி அறிவித்திருக்கிறது. 
 
பள்ளியில் பயிலும் பிஞ்சுகளின் உள்ளத்திலிருந்து சனநாயகம், மதச்சார்பின்மை, குடியுரிமை குறித்த சிந்தனைகளையே அகற்ற முயலும் மத்திய அரசின் பாசிச நடவடிக்கைகள் நாட்டின் ஒருமைப்பாட்டையே குலைக்கும் பேராபத்தாகும்.
 
இது பாஜக அரசின் எதேச்சதிகாரச் செயல்பாடுகள் ஒற்றைமயக்காலின் மற்றொரு வடிவமே! மக்களாட்சிக்கும், சனநாயகத்திற்குமே ஊறு விளைவித்து இந்நாட்டின் அடிப்படைக்கட்டமைப்பையே ஒவ்வொரு நகர்வின் மூலமாகத் தகர்க்க முயலும் பாஜக அரசின் படுபாதக நடவடிக்கைகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது. 
 
இதற்கெதிராக தேசிய இனங்களும், மாநிலக் கட்சிகளும், சனநாயக ஆற்றல்களும் அணிதிரண்டு அதனை முறியடிக்க வேண்டியது தற்காலத்தின் பெருங்கடமையாகிறது. ஆகவே, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்திலிருந்து சனநாயகம் தொடர்பாக 30 விழுக்காடு பாடத்திட்டத்தை நீக்குவது தொடர்பான அறிவிப்பாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.