1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 31 மே 2024 (08:19 IST)

அதீத ஆதரவே சில சமயம் பிரச்சனையாகிவிடும்… விராட் கோலி பேட்டி!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சமீபகாலமாக அனைத்துத் தொடர்களிலும் அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறார். ஆனாலும் அவரிருக்கும் அணி தொடர்ந்து தோற்று வருகிறது. சமீபத்தைய ஐபிஎல் தொடரில் அவர் 700க்கும் மேற்பட்ட ரன்களைப் பெற்று ஆரஞ்சு தொப்பியை பெற்றார். ஆனால் பெங்களூர் அணி ப்ளே ஆஃபில் இருந்து வெளியேறியது. இது சம்மந்தமாக கோலி மீது விமர்சனங்களும் எழுந்துள்ளன.


ஜூன் 1 ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் வைக்கப்படும் விளம்பரங்களில் விராட் கோலியின் புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது. இதற்காக இந்திய அணி கிளம்பி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இன்னும் விராட் கோலி அமெரிக்கா செல்லவில்லை. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இன்னும் செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் நாளை அவர் இந்திய அணியோடு இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் கடந்த 11 ஆண்டுகளாக இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையும் வெல்லாதது குறித்து பேசியுள்ளார். அதில் “இந்தியாவில் கிரிக்கெட் குறித்த பார்வையே வேறு விதமாக உள்ளது. சில நேரம் அதீத ஆதரவே அழுத்தமாக மாறிவிடும். நாம் ரசிகர்களிடம் சென்று எங்களிடம் வெற்றியை எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்ல முடியாது. ஆதரவை நாம் பாசிட்டிவ்வாகதான் பார்க்க வேண்டும். ஏனென்றால் நம் வெற்றிக்கு நமக்குப் பின்னால் பல பேர் ஆதரவாக இருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.