ராணுவ உடையில் கம்பீர நடையுடன் தோனி; காதலுடன் சாக்‌ஷி: வைரல் வீடியோ...

Last Updated: செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (18:01 IST)
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. 
 
அந்த வகையில் இந்த ஆண்டு பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி வெளியானது. கடந்த மார்ச் 20 ஆம் தேதி சிலருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. 
 
அதன் தொடர்ச்சியாக மீதமுள்ளவர்களுக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டது. இதில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தார்.
 
அந்த நிகழ்வின் போது தோனி ராணுவ உடையில் வந்திருந்தார். ராணுவ உடையில் கம்பீர நடையுடன் தோனி குடியரசு தலைவரிடமிருந்து பத்ம பூஷண் விருது பெற்றார். 
 
இந்த காட்சியும், தோனி விருது பெறும்போது அவரது மனைவி சாக்‌ஷி வெளிப்படுத்திய ரியாக்‌ஷன்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   
 
நேற்று இதே தினத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :