ஐபிஎல் சீசன் தொடங்கும் நிலையில் கொல்கத்தாவில் நடக்க உள்ள போட்டி ஒன்றை தேதியை மாற்றியமைக்கும்படி கொல்கத்தா போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாளை ஐபிஎல் சீசன் தொடங்கும் நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் வெகு ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த போட்டிகளில் ஏப்ரல் 6ம் தேதி அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையேயான போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் நாடு முழுவதும் ராம நவமியும் கொண்டாடப்படுகிறது. மேலும் ராம நவமியையொட்டி அன்றைய தினமே கொல்கத்தாவில் பாஜக கட்சி பிரம்மாண்ட பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இதனால் கொல்கத்தா முழுவதும் அதிக அளவில் போலீஸாரை காவல் பணியில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதால், அன்றைய தினம் ஐபிஎல் போட்டி நடத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்பதோடு, மைதானத்தில் காவல் பணியில் காவலர்களை நியமிப்பதிலும் சிக்கல் ஏற்படும்.
இதை சுட்டிக்காட்டி ஐபிஎல் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ள கொல்கத்தா போலீஸ், அந்த போட்டியை வேறு தேதிக்கு மாற்றி நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் தொடர்ச்சியாக எல்லா நாளும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அப்படி ஒரு போட்டியை மாற்றியமைப்பது சாத்தியமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
Edit by Prasanth.K