“ கேப்டனாக இருப்பதில் எனக்கு எந்த பிரஷரும் இல்லை… ஏனென்றால்…” வெற்றிக்குப் பிறகு சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ்!
17 ஆவது ஐபில் சீசன் நேற்று சென்னையில் தொடங்கியது. முதல் போட்டியில் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதனால் இந்த போட்டி ரசிகர்களால் பெரியளவில் கொண்டாட்டமாகப் பார்த்து ரசிக்கப்பட்டது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி முதலில் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்து 173 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் பேட் செய்த சி எஸ் கே அணியில் அனைத்து வீரர்களும் அதிரடியாக விளையாடினர். இதனால் 19 ஆவது ஓவரில் நான்கு விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்து எளிதாக இலக்கை எட்டியது.
இந்த போட்டிதான் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு கேப்டனாக முதல் போட்டி. இந்தபோட்டியில் அவர் 15 ரன்களுக்கு அவுட் ஆனார். போட்டி முடிந்த பின்னர் பேசிய அவர் “நான் எப்போதுமே கேப்டன்சியை ரசித்து விளையாடியுள்ளேன். எனக்கு அணியை எப்படி வழிநடத்த வேண்டும் என்ற அனுபவம் உள்ளது. எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. ஏனென்றால் எங்கள் அணியில் தோனி இருக்கிறார். எங்கள் அணியில் உள்ளவர்கள் அனைவருமே இயல்பாகவே சிறப்பான வீரர்கள்தான்” எனக் கூறியுள்ளார்.