1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2024 (07:15 IST)

பாகிஸ்தான் வம்சாவளி வீரருக்கு விசா பிரச்சனை… கோபத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து பிரதமரின் செய்தி தொடர்பாளர்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் இப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சோயிப் பஷிர் என்ற 20 வயது சுழல்பந்து வீச்சாளர் விசா பிரச்சனைகள் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

விசா கிடைக்காத காரணத்தால் அவர் அபுதாபியில் இருந்து இப்போது லண்டனுக்கு சென்றுள்ளார். அங்குள்ள இந்தியா ஹைகமிஷனிடம் இதுகுறித்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. சோயிப் பஷீர் பாகிஸ்தான் வம்சாவளி வீரர் என்பதால்தான் அவருக்கு விசா வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர் பேசும்போது “நான் இந்த பிரச்சனையின் தனித்தன்மைகள் குறித்து நான் பேச முடியாது. நான் ஏற்கனவே இதுபோல சில பிரச்சனைகளைக் கேள்வி பட்டிருக்கின்றேன். பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து குடிமகன்களுக்கு விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக அறிகிறேன்.  இதுபற்றி லண்டனில் உள்ள இந்திய ஹைகமிஷன் அதிகாரிகளிடம் பேசியுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.