செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 17 ஜூலை 2019 (12:40 IST)

அணியில் தோனி இருப்பார் ஆனால் விளையாட மாட்டார்?: அதிர்ச்சியளிக்கும் பிசிசிஐ

அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்று பயண ஆட்டத்திற்கு செல்லும் இந்திய அணியில் மகேந்திரசிங் தோனி இருக்கமாட்டார் என அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதி வரை சென்று தோல்வியை தழுவியது. இதனால் கிரிக்கெட் அணியில் பல மாற்றங்களை செய்ய தொடங்கியுள்ளது பிசிசிஐ.

அடுத்த ஆகஸ்டு மாதம் மூன்று நாள் சுற்று பயணமாக வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது இந்தியா. அங்கு நடைபெறும் ஆட்டத்தில் பங்குகொள்ள போகும் வீரர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தை பிசிசிஐ ஜூலை 19 அன்று டெல்லியில் நடத்த உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆட்டங்களில் தோனியின் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் சுற்று பயண ஆட்டத்திற்கு தோனி தேர்ந்தெடுக்கப்படமாட்டார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் அல்லது பார்தீவ் படேல் அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது.

ஷிகார் தவான் காயம் சரியாகிவிட்டால் சுற்று பயண ஆட்டத்தில் அவர் பங்குபெறுவது உறுதி. கிரேட் ஏ பிரிவில் உள்ள இளம் வீரர்களான அஸ்வின், முரளி விஜய் போன்றோருக்கு இந்த முறை வாய்ப்புகள் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

ஒருவேளை தோனி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 11 வீரர்களில் ஒருவராய் இருக்கமாட்டார். சப்ஜெக்டுகளில் 15 வீரர்களில் ஒருவராய் இடம் பெறுவார் என்றும் கூறப்படுகிறது. இந்திய அணியின் மிடில் ஆர்டர் வலுவான நிலையில் இல்லை என்ற குற்றசாட்டை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்படலாம் என கூறப்படுகிறது. 15 வீரர்களில் ஒருவராய் தோனி தேர்வானால் அணியில் இருப்பார் ஆனால் விளையாடமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.