ஐபிஎல் போட்டிகளை நடத்த அமீரகம் அழைப்பு! – பிசிசிஐ சொல்வது என்ன?
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து மார்ச் 20 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மார்ச் மாதம் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டன. ஆனால் ஏப்ரலிலும் ஊரடங்கு தொடர்ந்ததால் மறு அறிவிப்பு வரும் வரை ஐபிஎல் போட்டிகள் குறித்து அறிவிப்பு வெளியாகாது என கூறப்பட்டது.
இந்நிலையில் இலங்கையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. ஆனால் ஊரடங்கு முடியும்வரை எந்த முடிவும் எடுப்பதில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் ”ஐக்கிய அரபு அமீரகம் அழைப்பு விடுத்திருந்தாலும் தற்போதைய நிலையில் எங்கும் பயனம் செய்யமுடியாது. கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். தற்போது உலகமே ஸ்தம்பித்துள்ள நிலையில் எந்த முடிவும் எடுக்க முடியாது” என கூறியுள்ளார்.