1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. why-irandam-ulagam-failed-cinematographer-ramji-explanation

எடிட்டிங் நடக்கும்போதே தெரியும்.. அந்தப் படம் தேறாது! - இரண்டாம் உலகம் தோல்வி குறித்து ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஓபன் டாக்!

ஒளிப்பதிவாளர் ராம்ஜி
தமிழ் சினிமாவில் ஒரு படம் தோல்வியடைந்தால் அதன் பின்னணி குறித்து பல ஆண்டுகள் கழித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'இரண்டாம் உலகம்' படத்தின் தோல்வி குறித்து அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி தற்போது பகிர்ந்துள்ள கருத்துக்கள் வைரலாகி வருகிறது.
 
'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான செல்வராகவன், அடுத்தடுத்து 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' எனத் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய படங்களைக் கொடுத்தவர். இவருடைய மேக்கிங் ஸ்டைலைப் பார்த்துப் பலரும் இவரைஅடுத்த மணிரத்னம் என்று கொண்டாடினர்.
 
இந்தச் சூழலில் தான் ஆர்யா - அனுஷ்கா கூட்டணியில், முற்றிலும் மாறுபட்ட ஒரு ஃபேண்டஸி கதையாக 'இரண்டாம் உலகம்' படத்தை இயக்கினார் செல்வராகவன். விஷுவல் எஃபெக்ட்ஸ், பிரம்மாண்டமான செட்கள் என அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் 'பருத்திவீரன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'மௌன குரு' போன்ற படங்களில் தனது அபாரமான கேமரா கண்களால் ரசிகர்களை மிரட்டிய ஒளிப்பதிவாளர் ராம்ஜி. 'இரண்டாம் உலகம்' படம் குறித்து அவர் பேசுகையில் ஒரு அதிர்ச்சியான உண்மையை உடைத்துள்ளார்.
 
அவர் கூறியதாவது:
 
இரண்டாம் உலகம் படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே அந்தப் படம் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை. குறிப்பாக எடிட்டிங் பணிகளின் போது படத்தைப் பார்த்தபோது, இந்தப் படம் ஓடுவது கஷ்டம் என்று நான் வெளிப்படையாகவே சொன்னேன்.
 
மேலும் இது குறித்துப் பேசிய அவர், எனக்குச் சந்தேகம் இருந்த போதிலும், தயாரிப்பாளர் மற்றும் படத்தைப் பார்த்த மற்றவர்கள் அனைவரும் மிகவும் பாசிட்டிவாக இருந்தார்கள். படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று அவர்கள் நம்பினார்கள். நானும் அந்தப் படத்திற்காக சுமார் 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன். என் உழைப்பிற்காகவாவது அந்தப் படம் ஓட வேண்டும் என்று எனக்கும் ஆசை இருந்தது. ஆனால், இறுதியில் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
 
தொழில்நுட்ப ரீதியாகப் பலராலும் பாராட்டப்பட்டாலும், கதை சொல்லலில் ஏற்பட்ட குழப்பத்தால் இரண்டாம் உலகம் தோல்வியைத் தழுவியது. தற்போது அந்தப் படத்தின் தூண்களில் ஒருவரான ஒளிப்பதிவாளர் ராம்ஜியே இப்படிப் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
ரஜினி, கமல் படத்தில் இருந்து விலகியது ஏன்? தேர்தலுக்கு பின் புதுவிளக்கம் அளித்த சுந்தர் சி..!