1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2023 (15:38 IST)

துபாயில் மதுபானம் மீதான வரி குறைக்கப்பட்டது ஏன்?

liquor
துபாயில் மது மீதான 30% நகராட்சி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தவிர தனிநபர்கள் மதுபானங்கள் வாங்க இருந்த 'லைசன்ஸ்' முறையும் நீக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

நீண்டகாலமாக இருந்து வந்த முக்கியமான வருவாய் ஆதாரத்தை துபாயின் அரசக் குடும்பம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்று ஏபி செய்தி முகமை தெரிவிக்கிறது. துபாயில் சுற்றுலாவை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

"2023 ஜனவரி 1 ஆம் தேதி முதல் தனிநபர்கள் மதுபானம் வாங்க உரிமம் தேவையில்லை" என்று துபாயின் செய்தித்தாளான கலீஜ் டைம்ஸ் எழுதியுள்ளது. மதுபானம் வாங்குவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அடையாள அட்டை அல்லது சுற்றுலா பயணிகளுக்கு பாஸ்போர்ட் தேவை.

"ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மது அருந்துவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்க வேண்டும். வீட்டிலும், உரிமம் பெற்ற பொது இடங்களிலும் மட்டுமே மது அருந்த முடியும்" என்று அந்த செய்தித்தாள் மேலும் கூறுகிறது.

மது மீதான 30% நகராட்சி வரியை நீக்க துபாய் அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, ஜனவரி 1 முதல் துபாயில் உள்ள எல்லா 21 MMI கடைகளிலும் இது அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று மரிடைம் & மெர்கன்டைல் இன்டர்நேஷனல் (எம்எம்ஐ) மற்றும் எமிரேட்ஸ் லீஷர் ரீடெய்ல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிரோன் ரெட் தெரிவித்தார்.

துபாயில் அரசு ஆதரவு பெற்ற இரண்டு மதுபான சில்லறை விற்பனையாளர்கள் புத்தாண்டு தினத்தன்று திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டதாக ஏபி செய்தி முகமை எழுதியுள்ளது.

ஆனால் இது போன்ற அறிவிப்புகள் அரசு உத்தரவின் பேரில் வெளியிடப்படுகின்றன. அரசு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக முடிவை உறுதிப்படுத்தவில்லை மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்று ஏபி செய்தி முகமை கூறுகிறது.

ஆனால் துபாயில் மது தொடர்பான விதிகள் காலப்போக்கில் தாராளமயமாக்கப்பட்டுள்ளன. துபாயில் இப்போது ரம்ஜான் காலத்திலும் மதுபானம் கிடைக்கிறது. மேலும் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் வீடுகளுக்கு வந்து வழங்கும் ஹோம் டெலிவரியும் செய்யப்பட்டது.

துபாயில் மது விற்பனை தொடர்பாக நீண்ட நாட்களாக சலசலப்பு நிலவி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய்க்கு பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

கத்தாரில் நடந்த ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் போது துபாயின் பார்கள் கால்பந்து ரசிகர்களின் ஈர்ப்பு மையமாக இருந்தது.

மதுபான விலையில் அதன் உடனடி விளைவு என்ன?

விற்பனையாளர்களிடமிருந்து வாங்கப்படும் மதுபானங்களின் மீது அதன் தாக்கம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
Liquor

“ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது வணிகத்தில் ஒரு முக்கியமான மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையை எப்போதும் கடைப்பிடிக்கிறது. சமீபத்திய விதிமுறைகளுடன் துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாதுகாப்பாக மற்றும் பொறுப்புடன் மதுபானம் வாங்கப்படுவதை உறுதி செய்வோம்” என்று மது விநியோகஸ்தர் மரிடைம் & மெர்கன்டைல் இன்டர்நேஷனல் தெரிவித்தது.

இந்த முடிவு நிரந்தரமானதா என்ற கேள்விக்கு MMI பதிலளிக்கவில்லை. இருப்பினும், MMI ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இனி மற்ற எமிரேட்டுகளுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியதில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது. வரி இல்லாத மதுபானத்திற்காக துபாய் மக்கள் நீண்ட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இரண்டாவது மதுபான சில்லறை விற்பனையாளரான ஆப்ரிக்கன் & ஈஸ்டர்ன் நிறுவனமும், நகராட்சி வரிவிலக்கு மற்றும் உரிமம் இல்லாத மதுபானங்களை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. துபாய் சட்டத்தின்படி முஸ்லிம் அல்லாதவர் மது அருந்துவதற்கு அவரது வயது 21 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். மது அருந்துபவர்களுக்கு துபாய் போலீசார் பிளாஸ்டிக் கார்டு வழங்குகிறார்கள்.

இந்த அட்டை மதுபானம் வாங்க, எடுத்துச் செல்ல மற்றும் குடிப்பதற்கான அனுமதியாகும். இந்த அட்டை இல்லாமல் மது வாங்கினால் அல்லது குடித்தால் சிறை தண்டனைகூட விதிக்கப்படலாம். இருப்பினும், பார்கள், இரவு விடுதிகளில் கார்டுகள் அரிதாகவே கேட்கப்படுகின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பது துபாய், அபுதாபி, ஷார்ஜா, உம்முல்-குவைன், ராஸ்-அல்-கைமா, அஜ்மான் மற்றும் அல் ஃபுஜைரா ஆகிய ஏழு அமீரகங்களின் கூட்டமைப்பாகும். அபுதாபி அதன் தலைநகரம்.

ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது துபாய் தான். அதனால்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விவகாரம் என்றாலே அது துபாய் விவகாரம் என்றே கருதப்படுகிறது.

இந்த அமீரகங்கள் 1971 டிசம்பர் 1ஆம் தேதி பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றன, அடுத்த நாளே அதாவது டிசம்பர் 2 அன்று ஆறு அமீரகங்கள் ஒன்றிணைந்து கூட்டமைப்பை உருவாக்கின.

இரானிய கடற்படை ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள சில இடங்கள் தனக்குச் சொந்தமானவை என்று கூறி அதை கைப்பற்றியபோது, ஏழாவது அமீரகம் ராஸ் அல்-கைமா, 1972 பிப்ரவரி 10 ஆம் தேதி இந்தக்கூட்டமைப்பில் இணைந்தது.

ராஸ்-அல்-கைமா மற்றும் ஷார்ஜாவும் இந்தப் பகுதிகளுக்கு உரிமை கோரின. இந்த வழியில், இந்த இரண்டு அமீரகங்களும் கூட்டமைப்பில் சேர்ந்ததுடன் கூடவே இரானுடனான பிராந்திய தகராறும் உடன் வந்தது. அது இன்றும் தொடர்கிறது.