திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (17:05 IST)

'அழுவதை நிறுத்துங்க பிரான்ஸ்' - இறுதிப் போட்டி சர்ச்சைக்கு அர்ஜென்டினா ரசிகர்கள் பதிலடி

கத்தார் உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை

அர்ஜெண்டினா ரசிகர்கள் 'அழுவதை நிறுத்துங்க ஃபிரான்ஸ்' என ஒரு கையெழுத்து வேட்டையை நடத்தி இருக்கிறார்கள். அதில் இதுவரை சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் வரை கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

கத்தாரின் லூசைல் மைதானத்தில் கடந்த டிசம்பர் 18-ம் தேதி உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நடந்தது. இந்த போட்டியில் மோதிய பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் கூடுதல் நேரத்தின் முடிவில் தலா மூன்று கோல்கள் அடித்திருந்தன. ஆட்டம் சமநிலையில் இருந்ததால் பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டடது.

இதில் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வென்று 36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இதனால் தொடர்ச்சியாக இரு உலகக் கோப்பையை வெல்லும் பிரான்ஸ் அணியின் கனவு நொறுங்கியது. இந்த போட்டியின் முடிவில் எம்பாப்பேவை தொடர்ச்சியாக அர்ஜென்டினா கோல்கீப்பர் மார்ட்டினெஸ் கேலி செய்வதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக புகாரளித்தது.

பிரான்ஸ் தொடங்கி வைத்த கையெழுத்து வேட்டை

இந்நிலையில், MesOpinions எனும் வலைதளத்தில் FRANCE 4EVER எனும் ஒரு பயனர் ஃபிபாவுக்கு ஒரு மனு எழுதினார். இதில் நடுவர் குழு மொத்தமாக விலை போய்விட்டது .

இறுதிப்போட்டி மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மனுவில் கையெழுத்திட்டு பகிரவும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவில் சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட, இந்த விவகாரம் கால்பந்து உலகில் கவனம் பெற்றது. கையெழுத்திட்ட பலரும் போட்டி நடுவர் சைமோன் மார்சினியாக்கின் முடிவுகள் மீது அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

பிரஞ்சு ஊடகங்கள் பலவும் மார்சினியாக் முடிவுகளை விமர்சித்திருந்தன. L’Equipe எனும் ஒரு பிரஞ்சு நாளிதழ் அர்ஜென்டினாவுக்கு ஏன் மூன்றாவது கோல் வழங்கப்பட்டிருக்கக் கூடாது என கேள்வி எழுப்பி ஒரு கட்டுரை தீட்டியிருந்தது.

இந்நிலையில் போலாந்து நாட்டைச் சேர்ந்த நடுவரான மார்சினியாக் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். இதில் ''பிரஞ்சு ஊடகங்கள், ரசிகர்கள் இந்த போட்டோவை பற்றி குறிப்பிட மறந்துவிட்டார்கள் பாருங்கள்.
Mbappe

எம்பாப்பே கோல் அடிக்கும்போது ஏழு பிரஞ்சு வீரர்கள் அங்கே பிட்சில் இருந்தார்கள்,'' என்று குறிப்பிட்டார். அவர் எம்பாப்பேயின் மூன்றாவது கோலை குறிப்பிட்டார். அந்த கோல் மூலமாகத் தான் மேட்ச் பெனால்டி ஷூட் அவுட் சென்றது குறிப்பிடத்தக்கது.

அர்ஜெண்டினா ரசிகர்களின் பதிலடி

பிரஞ்சு ரசிகர்களின் மனுவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாலெண்டின் கோமஸ் என்ற பயனர் Change.org எனும் தளத்தில் அழுவதை நிறுத்தவும் பிரான்ஸ் என ஒரு கையெழுத்து வேட்டையை தொடங்கினார். அதில், "நாங்கள் உலகக்கோப்பையை வென்றதில் இருந்து பிரான்ஸ் ரசிகர்கள் இன்னும் அழுவதை நிறுத்தவில்லை. புகார் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்ஜெண்டினா உலக சாம்பியன் என ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். இங்கே ஒரு வேண்டுகோள் என்னவென்றால் பிரான்ஸ் அழுவதை நிறுத்தவேண்டும், மேலும் கால்பந்து வரலாற்றின் அதிசிறந்த வீரர் மெஸ்ஸி என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்," என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவில் வெறும் மூன்று நாட்களில் சுமார் ஏழு லட்சத்து 25 ஆயிரம் வரை பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆன்லைன் மனுக்களால் மறு போட்டி நடக்குமா?

சமூக வலைத்தள விவாதங்கள், ஆன்லைன் மனுக்கள், புகார்கள் போன்றவை வைக்கப்பட்டாலும் இறுதிப் போட்டியை மீண்டும் ஒருமுறை நடத்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.

ஏனென்றால் இதற்கு முன்பு பலமுறையும் போட்டிகள் பற்றிய பல புகார்கள் வந்தாலும் அதற்காக போட்டியை மீண்டும் நடத்தும் முடிவை ஃபிஃபா எடுத்ததில்லை.