சத்தியம் என்பது சர்க்கரை பொங்கல் மாதிரி என்ற சினிமா வசனத்தைப் போன்றதுதான் நம் பெரும்பாலோரின் புத்தாண்டு சபதமும்.
ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு விளையாட்டு ஆர்வலர் 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில், "இவ்வாண்டின் 365 நாட்களும் மாரத்தானில் வெற்றிகரமாக ஓடி சாதிப்பேன் " என்று எடுத்த புத்தாண்டு சபதத்தை நிறைவேற்றிக் காட்டியுள்ளார்.
ஆம். 365 நாளும் தினம் ஒரு மாரத்தான் ஓடியுள்ளார் அவர்.
பிரிட்டனில் கம்ப்ரியா பகுதியில் உள்ள கிளீட்டர் மூர் என்ற இடத்தைச் சேர்ந்த கேரி மெக்கீ என்பவர் கடந்த ஆண்டின் முதல் நாளில் இந்த சவாலை தொடங்கினார். மெக்மிலன் புற்றுநோய் உதவி மற்றும் மேற்கு கம்ப்ரியா மருத்துவமனை ஆகியவற்றிற்கு நிதி திரட்டுவதே அவரது நோக்கம்.
3 குழந்தைகளின் தந்தையான கேரி மெக்கீ, செல்லஃபீல்டு அணுமின் நிலையப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக அங்கிருந்த 42 கி.மீ. பாதையில் அடிக்கடி மராத்தான் ஓடியுள்ளார்.
எல்லைக் கோட்டை கடந்ததும், தனக்கு உற்சாக வரவேற்பு அளித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். தொண்டு நிறுவனங்களுக்காக 10 கோடி ரூபாய் பரிசை வெல்லும் தன் நோக்கத்தில் வெற்றி அடைந்து விட்டதாக அவர் பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
பார்வையாளர்களின் ஆரவாரத்திற்கிடையே, கடைசி மாரத்தானை காலை 8.30 மணிக்குத் தொடங்கிய அவர் பிற்பகல் 2 மணிக்கு வாண வேடிக்கைகளுக்கு நடுவே பந்தய தூரத்தை ஓடி முடித்தார்.
பின்னர் பேசிய அவர், "மழை பெய்த போதும் வீதியில் இருபுறமும் மக்கள் திரண்டிருந்து கைத்தட்டியும், உற்சாகக் குரல்களை எழுப்பியும் தனக்கு ஊக்கம் அளித்தனர்" என்று கூறினார்.
"எனக்காக மக்கள் கூடியிருந்ததை பார்க்கும்போது சிறப்பாக இருந்தது. இது எப்போதும் என் நினைவில் இருக்கும்," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மாரத்தானை தொடங்கும் முன் பிபிசியிடம் பேசிய கேரி மெக்கீ, தனக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்திருந்தாலும் கடைசி சவாலை எதிர்கொள்வதில் சற்று பதற்றமாக உணர்வதாக கூறினார்.
"கடக்க வேண்டிய தூரத்தை நினைத்து பதற்றம் இல்லை, இது கடைசி பந்தயம் என்பதால்தான் பதற்றம் கொள்கிறேன். இது ஒரு சிறப்பான நாள். புற்றுநோய் அனைவரையும் தாக்கக் கூடியது என்பதால் இது மேற்கு கம்ப்ரியன் பிரச்னை அல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கானது" என்றார் அவர்.
மேற்கு கம்ப்ரியா நலவாழ்வு சேவைகள் நிதி மற்று தகவல் தொடர்பு இயக்குநர் ஹார்லே மெக்கே கூறுகையில்,"நம்ப முடியாத சவாலில் ஜெயித்துக் காட்டிய கேரிக்கு நாங்கள் நிறைய நன்றிக் கடன்பட்டுள்ளோம்," என்றார்.
"கேரி மெக்கீ காட்டிய உடல் மற்றும் மன வலிமையை புரிந்துகொள்ள முடியவில்லை. 2 சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு அவர் நிதி மட்டும் திரட்டித் தரவில்லை, இந்த சவாலில் அவருக்கு ஆதரவாக உள்ளூர் மக்களையும் ஒன்றாக திரட்டி மாயம் செய்துவிட்டார்" என்று அவர் கூறினார்.
மெக்மில்லன் புற்றுநோய் உதவிக்கு நிதி திரட்டலுக்கான செயல் இயக்குநர் கிளேர் ரோவ்னி,"கேரியின் சாதனையும், தன்னலமற்ற சேவையும் அளவிட முடியாதவை. எங்கள் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக அசாதாரண மனிதனாக ஒவ்வொரு நாளும் மராத்தான் ஓடியுள்ளார்.
இதனை சாதிக்க சுய ஒழுக்கமும், திட சிந்தையும் எந்த அளவுக்கு தேவை என்பதை என்றால் கற்பனை செய்து மட்டுமே பார்க்க முடியும். புற்றுநோயால் வாடும் மக்களை கவனிக்கும் எங்கள் தொண்டு நிறுவனத்திற்கு அவர் செய்துள்ள உதவிகளுக்காக நாங்கள் நிறைய நன்றிக்கடன்பட்டுள்ளோம். அதனை விவரிக்க வார்த்தைகளே இல்லை," என்கிறார் நெகிழ்ச்சியுடன்.