ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2023 (11:00 IST)

நாகாலாந்து கிறிஸ்தவர்கள் பாஜகவை ஆதரிப்பது ஏன்?

கைகளில் பைபிள்கள், உதடுகளில் பக்திப் பாடல்கள் மற்றும் பிரார்த்தனையில் மூழ்கியிருக்கும் மக்கள். மக்கள் தொகையில் 90 சதவிகிதம் பேர் கிறிஸ்தவர்களாக இருக்கும் நாகாலாந்தில் இது ஒரு சாதாரண காட்சி.
 
150 ஆண்டுகளுக்கு முன்பு நாகாலாந்தை அடைந்த கிறித்துவம், இப்போது அதன் அடையாளம் மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. நாகாலாந்தில் உள்ள தீமாபூர் அல்லது கோஹிமா போன்ற பெரிய நகரமாக இருந்தாலும் சரி, சிறிய கிராமமாக இருந்தாலும் சரி, முதலில் கண்ணில் படுவது தேவாலய கட்டிடம்தான்.
 
தீமாபூர் அருகே தோலுவி கிராமத்தில் 1953ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாப்டிஸ்ட் தேவாலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை ஏராளமானோர் வந்துள்ளனர். இங்கு அனைவரும் பிரார்த்தனையில் மூழ்கியுள்ளனர். கோரஸ் மற்றும் பிரார்த்தனைக்குப் பிறகு, அங்கு இருந்த பாதிரியார் டாக்டர் ஹிகோடே மேடைக்கு வந்து உணர்ச்சிப்பூர்வமான உரையை நிகழ்த்துகிறார். அவர் தனது உரையில், கிறிஸ்தவத்தின் மதிப்புகளைத் தவிர, தூய்மையான தேர்தல் இயக்கம் பற்றியும் பேசுகிறார்.
 
மக்கள் தங்கள் மனசாட்சிக்கு செவிசாய்த்து, தூய்மையான மற்றும் நேர்மையான பிம்பம் கொண்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். தேர்தலில் எந்த விதமான பேராசையையும் தவிர்த்து, மனம் சொல்வதைக்கேட்டு வாக்களியுங்கள் என்று அவர் மக்களிடம் கூறுகிறார். நாகாலாந்தில் உள்ள தேவாலயங்களில் பாதிரியார்களின் இத்தகைய பேச்சுகள் மிகவும் சகஜம்.
 
தொகுதிகளின் கணக்கு
 
நாகாலாந்தில் பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக இங்கு கூட்டணி ஆட்சியில் உள்ளது. உள்ளூர் நாகா கட்சி தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் (என்டிபிபி) கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது.
 
என்டிபிபி 60 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
 
நாகாலாந்தில் வலுவான எதிர்க்கட்சி இல்லை. காங்கிரஸ் தவிர, இந்திய குடியரசுக் கட்சி, லோக் ஜனசக்தி கட்சி மற்றும் பல பிராந்திய கட்சிகள் இங்கு போட்டியிடுகின்றன.
 
2018 இல் மொத்தமுல்ள 60 இடங்களில் 26 இடங்களை வென்ற நாகா மக்கள் முன்னணி (NPF), 2021 இல் இங்கு பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 21 கட்சி எம்எல்ஏக்கள் கிளர்ச்சி செய்து NDPP கூட்டணியில் இணைந்தனர்.
இந்த முறை NPF வெறும் 22 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. அதாவது நாகாலாந்தில் இந்த முறை வலுவான எதிர்க்கட்சி இல்லை.
 
நாகாலாந்தில் எங்கு சென்றாலும் பாரதிய ஜனதா கட்சியின் பிரசாரம்தான் அதிகமாக காணப்பட்டது.
 
இங்கு ஒட்டப்பட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகளில் பிரதமர் நரேந்திர மோதியின் பெரிய படம் அச்சிடப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கான வாக்குறுதியுடன் பாஜக இங்கு வந்துள்ளது, அதை பலரும் நம்புவதுபோலத் தெரிகிறது.
 
வளர்ச்சியால் ஏற்பட்ட கவர்ச்சி
தீமாபூரில் ஒரு நண்பருடன் சேர்ந்து லாட்டரி கடை நடத்தும் இளைஞரிடம் பேசினோம். மாதம் ஐயாயிரம் ரூபாய்க்கு அவர் ரிசார்ட்டில் வேலை பார்க்கிறார். கிராமப்புறங்களில் வசிக்கும் இந்த கிறிஸ்தவ இளைஞர்கள் பாஜகவின் வளர்ச்சி வாக்குறுதியால் கவரப்பட்டுள்ளனர். பாஜகவால் இங்கு வளர்ச்சியை கொண்டு வர முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
 
வளர்ச்சியைப் பொருத்தவரை நாகாலாந்து மற்ற மாநிலங்களை விட பின்தங்கியுள்ளது. இங்கு ஒரு மருத்துவக் கல்லூரி கூட இல்லை. தலைநகர் கோஹிமா அல்லது தீமாபூர் போன்ற பெரிய நகரங்களில் இருந்து வெளியே வந்தவுடனேயே உடைந்த சாலைகள் கண்ணில் படுகிறது.
 
பா.ஜ.க வந்த பிறகு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. எங்களுக்காக நிறைய வேலைகள் செய்திருக்கிறார்கள். நான் கிறிஸ்தவன். மதத்தில் தலையிடாத வரை பாஜகவுக்கு வாக்களிப்பதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார் இந்த இளைஞர்.
 
நாட்டில் இந்துத்துவ கொள்கையை பின்பற்றும் கட்சி என்ற அடையாளத்தைக் கொண்ட பாஜகவில் நாகாலாந்தில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்கள் கட்சியை முன்னெடுத்துச் செல்வதில் முழுமையான ஈடுபாட்டுடன் உழைக்கின்றனர்.
 
ரோஸி யந்தன் 28 ஆண்டுகளாக பாஜகவில் இணைந்துள்ளார். நாகாலாந்தில் பாஜகவின் மகளிர் பிரிவுத்தலைவராக அவர் இருந்துள்ளார்.
 
"பாஜக வளர்ச்சி அரசியல் செய்யும் கட்சி. வளர்ச்சிக்காகவும், மக்களுக்கு நல்ல கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காகவும் பாஜக இங்கு வந்துள்ளது. பாஜகவில் மதம் குறித்து எந்த வகையிலும் பாகுபாடு இல்லை. மதம் தொடர்பான மோதலும் இல்லை. நாங்கள் எங்கள் மதத்தை பின்பற்றுகிறோம். என்றாவது ஒரு நாள் பாஜக ஆட்சி வரும், இங்கு வளர்ச்சி ஏற்படும் என்று நான் கனவு கண்டேன்,” என்று அவர் தெரிவித்தார்.
 
பாஜகவின் வளர்ச்சி பற்றி யாருக்கு கவலை?
ஆனால் மாநிலத்தில் இந்துத்துவ கட்சி ஒன்று முன்னேறிவருவது, கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள மாநிலத்தில் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
 
தீமாபூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தேவாலயத்தில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் பாஜக பற்றி கேட்டபோது அவர் கவனமாக பதில் அளித்தார்.
 
"நாகாலாந்து கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை கொண்ட ஒரு மாநிலம். கிறிஸ்தவ மாநிலம் என்பதால் எங்கள் மீது எந்த அழுத்தமும் இல்லை. ஆனால் வேறு இடங்களில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி நாங்கள் கேள்விப்படுகிறோம். மற்ற மாநிலங்களில் தேவாலயங்கள் சேதப்படுத்தப்படுகின்றன மற்றும் பல இடங்களில் மக்கள் தங்கள் மதத்தை கடைப்பிடிக்க சுதந்திரம் இல்லை. இங்கும் அதே போன்ற நிலைமை வந்துவிடுமோ என்ற கவலை எங்களுக்கு உள்ளது. ஏனென்றால் நாகாலாந்தும் இந்தியாவில்தான் உள்ளது,” என்றார் அவர்.
 
"மத விஷயத்தில் நேரடியாகத் தலையிடாத வரை இங்குள்ள மக்களுக்கு பாஜகவுடன் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் பலருக்கு அச்சம் உள்ளது" என்று அவர் கூறுகிறார்.
 
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்
கிறிஸ்தவர்கள் மீது அதிகரித்து வரும் வன்முறை தொடர்பாக, தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்துவ சமூகத்துடன் தொடர்புடைய அமைப்புகள், கடந்த ஞாயிற்றுக்கிழமை, டெல்லியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தின.
 
இந்தியாவில் தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக இந்த கிறிஸ்தவ அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
 
டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடம் அருகே உள்ள ஜந்தர் மந்தரில், நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களுடன் தொடர்புடையவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் (யுசிஎஃப்) தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 147 வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாகவும், 2022 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 598 ஆக உயர்ந்துள்ளது என்றும் UCF ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
இந்த சிறுபான்மை சமூகத்தின் மீதான பெரும்பாலான தாக்குதல்கள் உத்தரபிரதேசத்தில் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் நடப்பதாக UCF கூறுகிறது. நாகாலாந்தில் கிறிஸ்தவ மதத்துடன் தொடர்புடைய மக்கள் மீது எந்த விதமான தாக்குதல்களும் இதுவரை நடந்ததில்லை.
 
பணம் காரணமா?
டாக்டர் வில்லோ நலியோ, ஷாலோம் பைபிள் செமினரியின் அகாடமிக் டீன் மற்றும் தூய்மையான தேர்தல்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் ஆவார். நாகாலாந்து பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில் (NBCC) இந்த இயக்கத்தை வழிநடத்துகிறது.
 
தலைநகர் கோஹிமாவிலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் ஷாலோம் பைபிள் செமினரியின் பெரிய வளாகம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிறிஸ்தவ மதம் தொடர்பான கல்வியை பயின்று வருகின்றனர்.
 
மாநிலத்தில் பாஜகவின் எழுச்சிக்குப் பின்னால் பண பலம் இருப்பதாக டாக்டர் நாலியோ கருதுகிறார்.
 
2018 சட்டப்பேரவைத் தேர்தலில் நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 இடங்களில் 12 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. முன்னதாக, 2003 தேர்தலில் கட்சி அதிகபட்சமாக 7 இடங்களைப் பெற்றது.
 
2008ல் 2 இடங்களிலும், 2013ல் 1 இடத்திலும் அக்கட்சி வெற்றி பெற்றது. 2019 ஆம் ஆண்டில், பாஜகவின் கூட்டணிக் கட்சியான என்டிபிபியின் வேட்பாளர் நாகாலாந்தில் உள்ள ஒரே மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
 
மத்தியில் ஆட்சியில் உள்ள பலத்தின் மூலமாக பாஜக, நாகாலாந்தில் தனது அரசியல் களத்தை வலுப்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
பாஜகவின் எழுச்சிக்கான காரணத்தை விவரிக்கும் டாக்டர் வில்லோ நாலியோ, "நாகாலாந்தில் பாஜகவின் எழுச்சி அரசியலோடு மட்டும் நின்றுவிடவில்லை. பழங்குடியினர் நலச் சங்கங்களின் வடிவத்திலும் அவர்கள் இங்கு வருகிறார்கள்" என்கிறார்.
 
“கிராமத்திற்குச் சென்று பள்ளிக்கூடம் கட்டுகிறார்கள். சில கிறிஸ்தவர் அல்லாத குடும்பங்களை தன்னுடன் இணைத்துக்கொள்கின்றனர். தங்கள் பாரம்பரிய மதநம்பிக்கையை விட்டுவிடக்கூடாது என்று அவர்களை ஊக்கப்படுத்துகின்றனர். அவர்கள் நேரடியாக கிறிஸ்தவத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவர்களை வாரணாசி போன்ற இடங்களுக்கு படிக்க அனுப்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் திரும்பி வந்து இங்கு இந்தியை வளர்க்கலாம். என் கிராமத்திலும் அப்படி ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
 
டாக்டர் நலியோ குறிப்பிட்ட இந்தி பள்ளிக்கூடத்தை பார்க்க, தலைநகர் கோஹிமாவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஸ்வேமா கிராமத்தை அடைந்தோம்.
 
இந்த பள்ளி 2003 ஆம் ஆண்டு இங்கு நிறுவப்பட்டது. பள்ளி கட்டிடம் மிகவும் பெரியது ஆனால் இங்கு 10-15 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள்.
 
பள்ளிக்கு அருகில் உள்ள கிறிஸ்தவ குடும்பத்தின் வீட்டில் பாஜக கொடி பறப்பதை நாங்கள் பார்த்தோம். ”என் மகள் இந்த இந்தி பள்ளியில் தான் படிக்கிறார். பாஜக இங்கு வளர்ச்சியை கொண்டு வருவதாக எனது கணவர் நம்புவதால் நாங்கள் பாஜகவை ஆதரிக்கிறோம்,” என்று இங்கு வசிக்கும் சுஷ்மா ராய் கூறுகிறார்.
 
நேபாளத்தை பூர்வீகமாகக்கொண்ட சுஷ்மா ராய் பாஜக ஆதரவாளர். "பாஜக இங்குள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் வளர்ச்சியை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது. கிராமங்களிலும் பாஜக வளர்ச்சியை கொண்டுவரும் என்று நாங்கள் நினைக்கிறோம், அதனால்தான் இங்குள்ள மக்கள் அதற்கு ஆதரவளிக்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.
 
ஆபத்து
அக்கட்சியின் இந்துத்துவ செயல்திட்டத்தை இங்குள்ள மக்கள் புரிந்து கொள்ளாததும் நாகாலாந்தில் பாஜகவின் எழுச்சிக்கு ஒரு காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
"நாகாலாந்தில் பெரும்பாலான மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். இந்துத்துவ பிரச்சாரம் மற்றும் நிகழ்ச்சி நிரல் என்ன என்பதை கிராம மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நான் நம்புகிறேன். இதன் பொருள் என்ன என்பதை மக்கள் அறியவில்லை,"என்று ஓரியண்டல் தியாலஜிகல் செமினரியின் முதல்வரும், கிறிஸ்துவ சமய நிபுணருமான பேராசிரியர் டாக்டர். ஜோஷூவா லோரின் தெரிவித்தார்.
 
இருப்பினும், மாநிலத்தில் பாஜகவின் எழுச்சியைப் பற்றி டாக்டர் ஜோஷ்வா அதிகம் கவலைப்படவில்லை. நாகாலாந்தில் கிறிஸ்தவ நம்பிக்கை மிகவும் வலுவாக இருப்பதாகவும், இங்கு கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வரலாறு இல்லை என்றும் அவர் கூறுகிறார். "இங்குள்ள பெரும்பாலான பாஜக தலைவர்களும் கிறிஸ்தவர்கள் தான். நாகாலாந்தில் கிறிஸ்தவத்திற்கு ஆபத்து இருப்பதாக நான் உணரவில்லை,"என்றார் அவர்.
 
கிறித்தவ வளர்ச்சியின் வரலாறு
"நாகாலாந்திற்கு வந்த முதல் கிறிஸ்தவ மிஷனரி டாக்டர் ஈ. டபிள்யூ. கிளார்க்கின் முயற்சியால் 1871 ஆம் ஆண்டில் கிறிஸ்தவம் இங்கு வந்தடைந்தது. அசாமில் இருந்து கோதுலா என்ற மத போதகர் 1871 இல் இங்கு வந்து உள்ளூர் மக்களுக்கு கற்பித்தார். மொலுங்கிமோங்கின் நாகா பழங்குடியினர் சுபோங்மெரெனுடன் நட்பு கொண்டு அவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார்," என்று பேராசிரியர் டாக்டர் ஜோஷூவா லோரின் கூறுகிறார்.
 
இங்குள்ள பழங்குடியினர் ஒரே கடவுள் என்ற தத்துவத்தை நம்புகின்றனர். நாகாலாந்தில் கிறிஸ்தவம் வேகமாக பரவுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார் டாக்டர் ஜோஷூவா. கிறிஸ்தவம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் செய்தியுடன் மிஷனரிகள் அவர்களை சென்றடைந்தபோது, அவர்கள் இதனால் கவரப்பட்டனர்.
 
இன்று கிறிஸ்தவம் நாகாலாந்தின் அடையாளமாக மாறிவிட்டது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பாஜக தலைவர்களும் கிறிஸ்தவர்கள். பாஜக கிறிஸ்தவர்களுக்கு எதிரானது அல்ல என்ற செய்தியை கொடுக்க மாநில பாஜக தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.
 
"நாகாலாந்து மக்களுக்கு எங்களின் செய்தி தெளிவாக உள்ளது. பாஜக வளர்ச்சி திட்டத்துடன் முன்னேறி வருகிறது. நாங்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. நாங்கள் கிறிஸ்தவர்கள், பாஜகவில் இருக்கிறோம். இதனால் நாங்கள் குறைந்த கிறிஸ்துவர்களாக ஆகிவிடவில்லை. நாகாலாந்தில் கிறிஸ்தவம் பாதுகாப்பாக உள்ளது, பாதுகாப்பாக இருக்கும்," என்று நாகாலாந்தில் உள்ள பாஜக ஊடக ஒருங்கிணைப்பாளர் சுப்ராலு நயேகா கூறினார்.
 
பாஜகவுக்கு எதிர்ப்பு உள்ளதா?
இருப்பினும் நாகாலாந்தில் பாஜகவின் மதச்சார்பற்ற திட்டங்களை ஒரு தந்திரமாக காங்கிரஸ் பார்க்கிறது.
 
“பாஜகவின் வேட்பாளர்களும் கிறிஸ்தவர்கள்தான். அது இணைந்து போட்டியிடும் பிராந்தியக் கட்சியின் வேட்பாளர்களும் கிறிஸ்தவர்கள்தான். பாஜகவின் பிரச்சனை என்னவென்றால், இந்தி மொழி மாநிலங்களில் செய்யும் அரசியலை அது இங்கு செய்யமுடியாது,” என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் குறிப்பிட்டார்.
 
"அங்கு அவர்கள் இந்துத்துவா பற்றி பேசுகிறார்கள். இங்கே அவர்கள் அனைவரையும் பாதுகாப்போம், நாகாலாந்தின் கலாச்சாரத்தை பாதுகாப்போம் என்று கூறுகிறார்கள். நாகாலாந்து அவர்களின் இந்துத்துவ அரசியலை மறக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் நாட்டில் உள்ள தேவாலயங்கள் தாக்கப்படுகின்றன. சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் இங்கே நாகாலாந்துக்கு அருகில் அசாமிலும் தேவாலங்கள் மீது தாக்குதல் நடக்கின்றன,” என்று சசி தரூர் தெரிவித்தார். ‘‘நாட்டில் மத அடிப்படையிலான அரசியலுக்கு எதிராக பாஜக எதுவும் பேசுவதில்லை. நாகாலாந்துக்கு வந்து மதச்சார்பற்றதாக மாறுகிறது.” என்கிறார் அவர்.
 
இருப்பினும் நாகாலாந்தில் தனது வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுடன் மக்களை இணைப்பதில் பாஜக வெற்றி பெற்றதாகத் தெரிகிறது.
 
"நாகாலாந்தில் பாஜக வருவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. முந்தைய அரசுகள் தங்கள் பணிகளை சரியாக செய்யாததால் நாகாலாந்தில் பாஜக ஆட்சிக்கு வருகிறது. மாற்றத்திற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டது ஆனால் நாங்கள் அந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை,” என்று ஷாலோம் பைபிள் செமினரியில் மதக்கல்வி பெறும் மாணவர் ரோக்கொவிலே கிரே கூறினார்.
 
"இப்போது பாஜக வளர்ச்சிக்கான உறுதிமொழி அளிக்கிறது, அவர்கள் மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்., பாஜக தன் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை பின்பற்றும் வரை, தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பாஜக தனது நிகழ்ச்சி நிரலை மாற்றினால், நிச்சயமாக பிரச்சனை வரும்," என்றார் அவர்.
 
நாகலாந்தில் ஆட்சி எப்படி?
பாஜக.வுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் முதல்வர் நெய்ஃபியு ரியோ, மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக பொதுக்கூட்டங்களில் உறுதி அளித்து வருகிறார்.
 
பிபிசியிடம் பேசிய நெய்ஃபியு ரியோ, "நாகாலாந்து, கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை மாநிலம் என்பது பாஜகவுக்கும் இந்திய அரசுக்கும் தெரியும். அதனால்தான் தொகுதி பங்கீட்டில் கூட மக்களின் உணர்வுகளை அது புண்படுத்தவில்லை. அனைத்து மதங்களை சேர்ந்த மக்களும் இந்த மாநிலத்தில் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை என்னால் சொல்லமுடியும். அது அப்படியே இருக்கும் என்றும் மக்கள் விவேகத்துடன் செயல்படுவார்கள் என்றும் நான் நம்புகிறேன,” என்று கூறினார்.
 
நாகாலாந்தில் கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி முன்னிலையில் கிளர்ச்சியாளர்கள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆனால் இந்த ஒப்பந்தம் அடிமட்ட நிலையில் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
 
அதே நேரத்தில் கிழக்கு நாகாலாந்தின் 6 மாவட்டங்களில் உள்ள ஏழு நாகா சமூகத்தினர் தனி மாநில கோரிக்கை குறித்து குரல் கொடுத்துள்ளனர்.
 
பல தசாப்தங்களாக வன்முறையால் பாதிக்கப்பட்ட நாகாலாந்தின் பாதுகாப்பு நிலைமை சமீபத்திய ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது. நாகா அமைதி ஒப்பந்தம் என்ற வாக்குறுதி அளித்து பாஜக, மக்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது. இங்குள்ள தேர்தலில் நாகா அமைதி ஒப்பந்தம் மிகப்பெரிய விஷயமாக உள்ளது. கடந்த தேர்தலுக்கு முன்பும் நாகாலாந்தில் அமைதி தீர்வு ஏற்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது.
 
நாகாலாந்தில் உள்ள பிரிவினைவாத கட்சிகள் மத்திய அரசிடம் பேசி வருகின்றன. இது ஒரு நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறை.
 
ஆனால், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என முதல்வர் நெய்ஃபியு ரியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.